மதுரை விடைத்தாள் திருத்தும் முகாமில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பு; தேர்வுத்துறை உத்தரவு மீறப்படுகிறதா
மதுரை : மதுரையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 5 சதவீதம் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ல் முடிகிறது. ஏப்.17 ல் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்குகிறது. இதற்காக மதுரையில் சி.இ.ஓ.ஏ., கருமாத்துார் கிளாரட் பள்ளிகளில் திருத்தும் முகாம் நடக்கிறது. முகாம் அலுவலர்களாக திருமங்கலம் தொடக்க கல்வி அலுவலர் கணேசன், தலைமையாசிரியர் மலைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று முதன்மை தேர்வர்கள், உதவி தேர்வர்களுக்கான பணிகள் ஒதுக்கப்பட்டன. இதில் பெரும்பாலும் அரசு, உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தான் பணி ஒதுக்கப்பட்டுள்ளன. மெட்ரிக் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இந்தாண்டு தமிழ் வழி தேர்வர்களின் விடைத்தாள்களை தமிழ் வழி நடத்தும் ஆசிரியர்களும், ஆங்கில வழி தேர்வர்களின் விடைத்தாளை ஆங்கிலவழி பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தான் மதிப்பீடு செய்ய வேண்டும் எனதேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரையில் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அப்பள்ளி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு செய்யும் பணிகள் வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுத்துறை உத்தரவு மீறப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரையில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் அதிகம் உள்ளன. எனவே ஆங்கிலவழி விடைத்தாள்களை அவர்களே மதிப்பீடு செய்ய முடியும். விடைத்தாளில் திருத்துவதில் தவறு ஏற்பட்டால் அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க முடியும். ஆனால் மெட்ரிக் ஆசிரியர்களுக்கு செயலாளர் வரை தெரிவிக்கப்பட்டு தான் நடவடிக்கை எடுக்க முடியும். இருப்பினும் தேவையான அளவு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களையும் அழைத்துள்ளோம். முகாம் துவங்கியதும் சூழ்நிலைக்கு ஏற்ப மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப்படுவர் என்றார்.