பல்லடம்: உடுமலை, அமராவதி சக்கரை ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறி, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் செல்லமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, பல்லடத்தில் நேற்று அவர் கூறியதாவது:
பல ஆயிரம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் உடுமலை அமராவதி சர்க்கரை ஆலையில் உள்ள இயந்திரங்கள் பழுதடைந்ததன் காரணமாக, அவற்றை பழுதுபார்க்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, பல கோடி ரூபாய் செலவாகும் என்பதால், ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற கரும்பு விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த ஆலையை நம்பித்தான் விவசாயிகள் கரும்பு நடவு செய்து வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வந்துள்ளனர். ஆலையை மூடுவது, விவசாயிகளை நட்டாற்றில் கைவிடுவதாக உள்ளது. இந்த சர்க்கரை ஆலை வாயிலாக, விவசாயிகள் மட்டுமின்றி, தமிழக அரசும் பயனடைந்து வருகிறது. எத்தனையோ பல திட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கும் அரசு, விவசாயிகளை பாதிப்புக்கு உள்ளாகும் இதற்காக ஏன் செலவழிக்க கூடாது? தமிழக அரசு, வேளாண் துறை, ஆலையை மூட ஒருபோதும் அனுமதிக்க கூடாது.சர்க்கரை ஆலையில் உள்ள இயந்திரங்களை உடனடியாக பழுது நீக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, கரும்பு விவசாயிகள் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.