உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதற்காக அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைத்தது தவறு!

மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதற்காக அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைத்தது தவறு!

சென்னை: 'குற்ற வழக்கில் மேல்முறையீடு நிலுவையில் இருக்கிறது என்பதற்காக, அமலாக்கத்துறை வழக்கை சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்தது தவறு' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியை சேர்ந்த அசோக் ஆனந்த் என்பவருக்கு எதிரான குற்ற வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அசோக் ஆனந்த்க்கு எதிராக, அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை துவங்கும் நிலையில் இருந்தது.அப்போது, மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால், சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி, அசோக் ஆனந்த் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்ற சிறப்பு நீதிமன்றம், விசாரணையை தள்ளி வைத்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், நீதிபதி மரியா கிளைட் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:முதல் தகவல் அறிக்கையையும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கையும், சமமாக பாவிக்க முடியாது. முதல் தகவல் அறிக்கையும், அமலாக்கத்துறை வழக்கும் வெவ்வேறானவை; தனிப்பட்டவை.இந்த வழக்கை பொறுத்தவரை, அமலாக்கத்துறை விசாரணையை முடித்து, புகாரை தாக்கல் செய்து விட்டது. குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து, விசாரணையை சிறப்பு நீதிமன்றம் துவங்க வேண்டும். பூர்வாங்க குற்ற வழக்கும், அமலாக்கத்துறை வழக்கும் வெவ்வேறான தன்மை உடையவை.மேல்முறையீடு நிலுவையில் இருக்கிறது என்பதற்காக, அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்தது தவறு. புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை