ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ், 47, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேலகொண்டப்பள்ளியில் தங்கி, சரஸ்வதி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். இவர் மற்ற கடைகளை விட சவரனுக்கு, 2,000 ரூபாய் குறைவாக கொடுத்ததால், மக்கள் பலர் இவரிடம் முன்கூட்டியே பணத்தை கொடுத்து, சில மாத இடைவெளியில் தங்க நகையை வாங்கிக் கொள்வது வழக்கம்.அதுபோல பலர், ஓம்பிரகாஷிடம் நகையை அடமானம் வைத்திருந்தனர். ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரவிக்குமார், 37, என்பவர், 3 சவரன் நகைக்காக, கடந்தாண்டு 1.30 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார். நவ., 28ல் நகை வழங்குவதாக ஓம்பிரகாஷ் கூறியிருந்தார். இதனால், நவ., 28 காலை நகைக்கடைக்கு ரவிக்குமார் சென்ற போது, மூடப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீசில் ரவிக்குமார் புகார் செய்தார்.மத்திகிரி போலீசார் விசாரணையில், பேலகொண்டப்பள்ளி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டவர்களிடம் நகை தருவதாகக் கூறி, 4.75 கோடி ரூபாயை வசூல் செய்து அவர் மோசடி செய்து, தலைமறைவானது அம்பலமாகியது. பொதுமக்கள் அடமானம் வைத்த நகை, ஓம்பிரகாஷிடம் உள்ளதால் பலர் கலக்கம் அடைந்துள்ளனர். மத்திகிரி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே மருதுார் விவசாயி சதீஷ் 33. இவரது மனைவி கீதா 24. இவர்களுக்கு இரண்டரை வயதில் மதுனிகா என்ற பெண் குழந்தையும், அபிமன்னன் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் நேற்று காலை கீதா உள்ளிட்ட ஏழுபேருக்கு நயினார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டது. இதில் கீதாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பினர். ஆனால் வழியில் கீதா உயிரிழந்ததாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.பாட்டிலை முகத்தில் குத்திய மாணவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு ஆண்கள் பள்ளியில் பயிலும் 15 வயது இரு மாணவர்கள் சைக்கிளில், பிப்.13ம் தேதி சென்றபோது, அவருடன் பயிலும் ஒரு மாணவர் பைக்கில் மோதுவது போல வந்ததால் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் மாலை தகராறு செய்த இரு தரப்பினரும், அறந்தாங்கி ரயில்வே கேட் அருகில் சென்று பேசிக் கொள்ளலாம் எனக்கூறி, ஒரு கட்டத்தில் ஒரு மாணவரை மற்றொரு 15 வயது மாணவர் பாட்டிலை உடைத்து முகத்தில் குத்தியுள்ளார். இதில், காயம்பட்ட மாணவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அறந்தாங்கி போலீசார், பாட்டிலை உடைத்து முகத்தில் குத்திய மாணவரை கைது செய்து, தஞ்சாவூர் இளம் சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.நடத்துனரின் டிக்கெட் பை 20,000 ரூபாயுடன் 'ஆட்டை'
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை, புதுச்சேரி வரை செல்லும் அரசு விரைவு பேருந்து ஒன்று, பயணியருடன் புறப்பட்டுச் சென்றது. இப்பேருந்து, கோயம்பேடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே வரும்போது, நடத்துனர் ஜெகதீசன்,40, தன்னுடைய டிக்கெட் பையை காணாமல் தேடியுள்ளார். பின், பேருந்து மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு திரும்பியது. அங்கு பயணியர் அனைவரையும் இறக்கி விட்டு, சோதனை செய்தும், பணம் இருந்த டிக்கெட் பை கிடைக்கவில்லை.இதுகுறித்து, கோயம்பேடு போலீசில் ஜெகதீசன் புகார் அளித்தார். அந்த பையில், 20,000 ரூபாய் மற்றும் 38,000 ரூபாய் மதிப்பிலான பேருந்து டிக்கெட்டுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, பணத்துடன் பையை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.தொழில் போட்டியால் திருநங்கை கொலை
சென்னை - பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிம்மி, 21; திருநங்கை. கடந்த ஜன., 25ம் தேதி இரவு இவர் வீடு திரும்பவில்லை. அவரை காணவில்லை என பெற்றோர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை, தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். போலீசார் சிம்மியை தேடி வந்த நிலையில், ஜன., 28ம் தேதி செம்மஞ்சேரி, ராஜிவ்காந்தி சாலை அடுத்த முட்புதரில் அழுகிய நிலையில் ஒரு உடல் மீட்கப்பட்டது.இறந்தவர் கையில் வெட்டு விழுந்திருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான சிம்மியின் பெற்றோரை அழைத்துக் காட்டினர். அவர்கள் அது சிம்மி என உறுதி செய்தனர். உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிம்மி மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர்.உடல் மீட்கப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நான்கு திருநங்கையர் சிம்மி கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்து தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து, இந்த கொலையில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில், கடந்த 3ம் தேதி 60 கிலோ கஞ்சா பிடிபட்ட வழக்கில் ஐந்து திருநங்கையர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.இதில், திருநங்கையரான பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அபர்ணா, 27, ஆனந்தி, 37, ரதி, 36, கண்ணகி நகரைச் சேர்ந்த அபி, 32, ஆகியோர், கஞ்சா தொழில் போட்டி காரணமாக சிம்மியை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்கில் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இளைஞரை வெட்டி பைக் பறித்த சிறுவர்கள்
சென்னை - தாம்பரம் அருகே, படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி, மோச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன், 30; வெல்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா யூனிக்கான்' பைக்கில் செரப்பணஞ்சேரி - --மோச்சேரி சாலையில் சென்றார்.அப்போது, மாதவனை வழிமறித்த மர்ம நபர்கள் மூவர், கத்தியால் வெட்டிவிட்டு, பைக்கை பறித்துச் சென்றனர். காயமடைந்த மாதவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரை விசாரித்த மணிமங்கலம் போலீசார், நாவலுார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.சிறுவனுக்கு தொந்தரவு: மத போதகர் கைது
கேரள மாநிலம் மூணாறில் நல்லதண்ணி எஸ்டேட்க்குச் செல்லும் ரோட்டில் உள்ள சர்ச்சில் 2023 ஏப்ரலில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்க சென்ற அதே பகுதியைச் சேர்ந்த அச்சிறுவனுக்கு சர்ச்சைச் சேர்ந்த போதகர் சபாஸ்டின் 45, பாலியல் தொந்தரவு தந்தார். இந்நிலையில் பள்ளியில் சில நாட்களுக்கு முன் நடந்த கவுன்சிலிங்கின் போது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தார்.இதையடுத்து மூணாறு போலீசில் பள்ளி நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். சொந்த ஊரான துாத்துக்குடிக்கு சென்ற சபாஸ்டினை, அங்கு வைத்து இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் கைது செய்து மூணாறுக்கு அழைத்து வந்தனர்.மனைவியின் தலையுடன் சுற்றிய கணவர் கைது
மேற்கு வங்கத்தில் புர்பா மேதினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் குச்சாய்த், 40. இவரது மனைவி புல்ராணி குச்சாய்த். கடந்த 14ம் தேதி, கவுதம் - புல்ராணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவுதம், அரிவாளால் மனைவி புல்ராணியின் தலையை வெட்டினார். துண்டிக்கப்பட்ட தலையுடன், அருகே உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்ற கவுதம், அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்தார். இதை, அங்கிருந்த பொது மக்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், கவுதமை கைது செய்தனர். உ.பி.,யிலும் பயங்கரம்
உத்தர பிரதேசத்தின் பாரபங்கியைச் சேர்ந்தவர், அனில். கட்டட வேலை செய்யும் இவருக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அனில், அவரது தலையை வெட்டினார். துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த இவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் மர்ம மரணம்
ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி ஆட்சி செய்கிறது. இங்கு, 'எதிர்கால ரஷ்யா' என்ற கட்சியை நடத்தி வந்த அலெக்சி நாவல்னி, அதிபர் புடினுக்கு எதிராக ஊழல் புகார்களை தொடர்ச்சியாக சுமத்தி வந்தார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ரஷ்ய அரசு, 2021ல் அவரை சிறையில் அடைத்தது. 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அங்குள்ள ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்சி, சிறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அந்நாட்டு சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.