தி.மு.க.,வின் டில்லி துாதராகிறார் கமல்; பிரதமர் மோடியை சந்தித்ததன் பின்னணி
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தி.மு.க.,வின் டில்லி துாதராகவே பிரதமர் மோடியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க., ஆதரவில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல், கடந்த ஜூலை 25ல் பதவியேற்றார். அதன்பின், முதல் முறையாக நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vks6ijpz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து கமல் வெளியிட்ட பதிவில், 'கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காகவே, பிரதமர் மோடியை சந்தித்தேன்' என கூறியிருந்தார். இது தொடர்பாக, பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம்:
பிரதமர் மோடியை பொறுத்தவரை, பா.ஜ.,வுடன் நேரடி தேர்தல் போட்டியில் உள்ள சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் தவிர, மற்ற மாநில கட்சிகளை, 'எதிரி' கட்சிகளாக பார்ப்பதில்லை. கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் நட்பை மோடி பேணி வந்தார். கடந்த 2014 முதல் 2019 வரை, ராஜ்யசபாவில் இந்த கட்சிகளின் ஆதரவுடன் தான், பல்வேறு சிக்கலான சட்ட மசோதாக்களை, மோடி அரசு நிறைவேற்றியது. அதுபோல, தேர்தலில் கூட்டணி வைக்க முடியாத நிலை இருந்தாலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன், மோடி நட்பை பேணி வருகிறார். அவரை வைத்து, காங்கிரஸ் கட்சிக்கு பல நெருக்கடிகளை கொடுத்தார். இதுபோல, அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்தாலும், தி.மு.க., வுடன் நட்பை பேணி வருவதாக பா.ஜ.வினர் தெரிவிக்கின்றனர். தி.மு.க., அமைச்சர்கள் பலர் மீது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தி.மு.க., அரசு மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதால், தமிழக அரசை நிர்வகிப்பதிலும் பல்வேறு நெருக்கடிகளை, தி.மு.க., அரசு சந்தித்து வருகிறது. எனவே, தேர்தல் அரசியலில் பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடியாத நிலை இருந்தாலும், டில்லியில் பா.ஜ.,வுடன் பரஸ்பரம் இணக்கமாக செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, முரசொலி மாறன் பா.ஜ.,வுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால், இப்போது அப்படி யாரும் இல்லை. கனிமொழியை டில்லி முகமாக முன்னிறுத்த, தி.மு.க., தலைமை விரும்பவில்லை. டி.ஆர்.பாலு, ஆ.ராஜா போன்றவர்களாலும், பா.ஜ., தலைமையுடன் நெருங்க முடியவில்லை. அதனால் தான், வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுக்காமல், கமலை எம்.பி.,யாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டிலேயே, மோடியின் மனதில் இடம் பெற்றவர் கமல். 2014ல், 'துாய்மை இந்தியா' திட்டத்தை பிரபலப்படுத்த, மோடி தேர்ந்தெடுத்த துாதர்களில் கமலும் ஒருவர். ராஜ்யசபா எம்.பி.,யாக புது அவதாரம் எடுத்துள்ள கமல், டில்லியின் தி.மு.க., துாதராக செயல் படுவார். அதன் துவக்கமாகவே, பிரதமர் மோடியை நடிகர் கமல் சந்தித்துள்ளார். அதனால் தான், கமல் கேட்டதும், பிரதமர் மோடியின் அப்பாயின்மென்ட் கிடைத்துள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.