மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
சென்னை: ''தி.மு.க., சதி செய்து விட்டது என்ற த.வெ.க.,வினரின் குற்றச்சாட்டு அபத்தமாக உள்ளது. கரூர் துயர சம்பவத்தில், யார் மீது குற்றம் என்பது விசாரணையில் தெரிய வரும்,'' என, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி தெரிவித்தார். சென்னையில், அவர் அளித்த பேட்டி: கரூர் துயர சம்பவத்தில், மருத்துவமனையில் பலர் போராடிக் கொண்டிருக்கின்றனர். எத்தனையோ குடும்பங்களில், தந்தை, குழந்தைகளை இழந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தன் 'வீடியோ' பதிவில், 'இது யாரையும் பழி சொல்லக்கூடிய நேரம் இல்லை. சமூக வலைதளங்களில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்' என, பெருந்தன்மையோடு பேசியிருக்கிறார். ஏனென்றால், கரூர் சம்பவத்தில் மரணித்த குடும்பங்ளுடைய வலி, ரணம், காயம் ஆறாத நிலையில், நாம் தவறான விஷயங்களை சொல்லி, அவர்களுக்கு மேலும், மேலும் வேதனையை உருவாக்கக்கூடாது. கரூரில் பாதிக்கப்பட்டதும், மக்களோடு நின்றதும் தி.மு.க., அரசும்; தி.மு.க.,வினரும்தான். 'யார் மீது தவறு இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில், பழி சுமத்தும் விளையாட்டு துவங்குவது தவறான ஒன்று. ஒரு கட்சி தலைவர், சம்பவ இடத்திலிருந்து ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் போவது; தன் பாதுகாப்பை மட்டும் நினைப்பது, நான் இதுவரை பார்த்திடாதது. தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த, இரண்டாம் கட்ட தலைவர்கள் மக்களோடு நிற்கின்றனர். த.வெ.க.,வின் அடுத்தகட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் கூட, மக்களை வந்து சந்திக்காமல், உதவிகள் செய்யாமலிருப்பது மனிதாபிமானமற்ற செயல். ஆதவ் அர்ஜுனாவின் வன்முறையை துாண்டும் சமூக ஊடகப்பதிவு, உச்சகட்ட பொறுப்பின்மை. எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், சூழ்நிலையை அமைதியாக்குவது முதல் கடமை. வன்முறையை துாண்டி உயிர் இழப்புகளை உருவாக்கக்கூடிய பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும். எப்படியாவது அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என நினைப்பது, மிகத் தவறான முன்னுதாரணம். சி.பி.ஐ., விசாரணை உட்பட, எந்த விசாரணையை வேண்டுமானாலும் எதிர்க்கட்சிகள் கேட்கட்டும்; அது அவர்கள் உரிமை. இவ்வாறு கனிமொழி கூறினார்.
30-Sep-2025