கட்சி பெயரை த.ம.க., என மாற்றி எழுதிய கரூர் போலீசார்
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த 27ம் தேதி இரவு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடந்த பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி, 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, போலீஸ் இன்ஸ் பெக்டர் மணிவண்ணன் அளித்த புகார்படி, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் உட்பட, பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் டவுன் போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரில், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரை, 'தமிழக மக்கள் கட்சி' என, ஒரு இடத்தில் மாற்றி எழுதியுள்ளனர். முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் முக்கியமான ஆவணம். நீதிமன்ற விசாரணையின் போது, எப்.ஐ.ஆரின் பங்கு முக்கியமானது. அதையே தவறாக எழுதி இருப்பது, போலீசாரின் அக்கறையின்மையே காட்டுகிறது என விபரம் அறிந்தோர் கூறுகின்றனர்.