நாகர்கோவிலில் கிம்ஸ்ஹெல்த்!
சென்னை:'கேர்' மருத்துவமனைகள் மற்றும் கிம்ஸ்ஹெல்த் ஆகியவற்றை நிர்வகித்து வரும், குவாலிட்டி கேர் இந்தியா நிறுவனம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 210 படுக்கை வசதிகள் உடைய, நான்காம் மற்றும் மூன்றாம் படிநிலை உயர்சிகிச்சை மருத்துவமனையை, 'கிம்ஸ்ஹெல்த் நாகர்கோவில்' என்ற பெயரில் துவக்கியுள்ளது. சென்னையில் இருந்தபடி, மருத்துவமனை துவக்க விழாவில், தொழில் துறை அமைச்சர் ராஜா, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன், பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மருத்துவமனை பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கிம்ஸ்ஹெல்த் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.ஐ.சஹதுல்லா பேசியதாவது:இன்னும் அதிக மக்களுக்கு சேவையாற்றுவது எங்கள் நோக்கம். அதனால், தமிழகத்தில் எங்கள் நுழைவு ஒரு இயற்கையான முன்னேற்ற நடவடிக்கை. குவாலிட்டி கேர் நிறுவன ஆதரவோடு, உலகத்தரம் வாய்ந்த மருத்துவ நெறிமுறை மற்றும் நன்னெறி தரநிலைகளோடு, சிறப்பாக சிகிச்சை சேவை வழங்குவதில் எங்கள் அர்ப்பணிப்பை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.குவாலிட்டி கேர் குழும நிர்வாக இயக்குனர் வருண் கண்ணா பேசுகையில், ''இந்தியாவில் எட்டாவது மாநிலமாக, தமிழகத்தில் எங்கள் சேவை செயல்பாட்டை நாகர்கோவிலில் விரிவாக்குகிறோம். கிம்ஸ்ஹெல்த்தின் மருத்துவமனை, முதன்மையான சிகிச்சை பராமரிப்பு நிறுவனமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தின் ஓர் அங்கமாக திறக்கப்பட்டுள்ளது,'' என்றார்.