கொடநாடு வழக்கு: ஸ்டாலினுக்கு தினகரன் கேள்வி
புதுக்கோட்டை: 'கொடநாடு கொலை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறியது என்ன ஆனது' என முதல்வர் ஸ்டாலினுக்கு அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பின், தினகரன் அளித்த பேட்டி: தமிழகத்தில் இந்த ஆண்டு விளைச்சல் அதிகம். ஆனால், மழையால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு விரைந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில், ஊழல் நடந்துள்ளதாகவும், தனி நீதிமன்றம் வாயிலாக அவற்றை விசாரித்து தண்டனை கொடுப்பேன் எனவும், கொடநாடு கொலை வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், அதற்கும் விரைவில் நல்ல தகவல் வரும் என்றும் சட்டசபையில், முதல்வர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நாலரை ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டசபையிலேயே முதல்வர் அளித்த வாக்குறுதி என்ன ஆனது? வரும் சட்டசபை தேர்தலில், துரோகத்தை வீழ்த்தும் நிலைப்பாட்டில் அ.ம.மு.க., உள்ளது. த.வெ.க., தலைவர் விஜய் ஒரு சூப்பர் ஸ்டார். அவர், தனது வருமானத்தை விட்டு விட்டு, கட்சி தொடங்கி உள்ளார். அவர், பழனிசாமியை முதல்வராக்க, அ.தி.மு.க., கூட்டணிக்கு வரமாட்டார். ஒருவேளை, விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால், அந்த கூட்டணிக்கு விஜய் வர வாய்ப்பு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.