ஓட்டுக்கு பணம் வழக்கு: முக்கிய சாட்சி ஆப்சென்ட்
புதுடில்லி: 2008-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் முக்கிய சாட்சியான சுதேந்திரா குல்கர்னி என்பவர் இன்று கோர்டில் ஆஜராகவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமர்சிங் , தற்போது ஜாமின் கிடைத்தாலும், உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவரது ஜாமின் இன்றுடன் முடிவடைந்தது. இன்று நடந்த இந்த வழக்கின் விசாரணையில் முக்கிய சாட்சியான சுதேந்திரா குல்கர்னி என்பவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதில் அவர் இன்று ஆஜராகவில்லை. தற்போது அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் அக்டோபர் 2-ம் தேதி ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதேந்திரா குல்கர்னி , பா.ஜ.மூத்த தலைவர் அத்வானியின் முன்னாள் உதவியாளர் ஆவார்.