வரலாறு படைத்தது குறுவை நெல் சாகுபடி அறுவடைக்கு 6.09 லட்சம் ஏக்கர் தயார்
சென்னை:டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு, 6.09 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி பிரதானமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களில், ஜூன் மாதம் குறுவை பருவ நெல் சாகுபடி காலம் துவங்கும். இதற்காக, அதே மாதம் 12ம் தேதி, மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். குறுவை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு தொகுப்பு திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு, 50 சதவீத விலையில் விதை நெல், ஏக்கருக்கு, 4,000 ரூபாய் இயந்திர நடவு மானியம் வழங்கப்பட்டது. இதற்காக நடப்பாண்டு, 58 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது. மேட்டூர் அணையை, ஜூன் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால், பாசன தேவை பூர்த்தி செய்யப்பட்டது. மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியதால், அதிகளவில் நீர் திறக்கப்பட்டு, கடைமடை பகுதிகளை நீர் சென்றடைந்தது. இதனால், உற்சாகம் அடைந்த விவசாயிகள் சாகுபடியில் கவனம் செலுத்தினர். வேளாண் துறையினர் சிறப்பு தொகுப்பு திட்டத்தை குறித்த காலத்தில் செயல்படுத்தினர். இதன் பயனாக, நடப்பாண்டு நெல் சாகுபடி பரப்பு, 6.09 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. குறுவை பருவ நெல் சாகுபடி முடிந்து, அறுவடைக்கு தயாராகி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில், முதல் முறையாக குறுவை சாகுபடி பரப்பு உச்சம் தொட்டுள்ளது. கடந்தாண்டு, 3.88 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்தது. இதனால், நடப்பாண்டு நெல் கொள்முதல் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முறைகேடுகள் கூடாது டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதலை , அரசு விரைந்து துவங்க வேண்டும். இதற்காக, மாவட்ட அளவில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை, அரசு விரைந்து கூட்ட வேண்டும். கடந்த பருவ நெல் கொள்முதலில், தனியார் நிறுவனத்தை, தமிழக அரசு ஈடுபடுத்தியது. இதனால், விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்வதில் பிரச்னை எழுந்தது. எனவே, நடப்பாண்டு நெல் கொள்முதலில், தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது. கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். - பி.ஆர்.பாண்டியன், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்