அரசு பள்ளி வளாக மரத்தில் சடலமாக கிடந்த தொழிலாளி
ராயக்கோட்டை: ராயக்கோட்டை அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் துாங்கில் தொங்கிய நிலையில், தொழிலாளியின் அழுகிய சடலம் கிடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று காலை பள்ளி திறக்கப்பட்டு, மாணவர்கள் வந்தனர். பள்ளி வளாகத்தில் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில், அறிவியல் ஆய்வகத்தின் மாடியில் ஏதோ காற்றில் அசைவது போன்று இருந்தது. இதனால் பள்ளி நிர்வாகத்தினர், மொட்டை மாடியில் ஏறி பார்த்தனர். அங்கு கட்டடத்தை ஒட்டிய தேக்கு மரத்தில், வேஷ்டியில் துாக்கிட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் தொங்கி கொண்டிருந்தது. ராயக்கோட்டை போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில் தற்கொலை செய்து கொண்டது, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏமனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார், 46, என்பதும், குடும்ப பிரச்னையால் வீட்டிலிருந்து வெளியேறியவர், பள்ளி விடுமுறை நாளில் வளாகத்திற்குள் நுழைந்து, தேக்கு மரத்தில் ஏறி, அறிவியல் ஆய்வக மொட்டை மாடியில் இறங்கி, துாக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.