உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீரபாண்டி ஆறுமுகம் நாளை போலீசில் ஆஜராகிறார்

வீரபாண்டி ஆறுமுகம் நாளை போலீசில் ஆஜராகிறார்

சேலம்:சேலம், அங்கம்மாள் காலனி நில விவகாரம், பிரிமியர் ரோலர் மில் வழக்குகளில், சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, சேலம் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்புக் குழுவில், நாளை ஆஜராகும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில், அவர் ஆஜராகும் நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சேலம் அங்கம்மாள் காலனி மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை, அபகரித்ததாக, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 13 பேர் மீது, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்புக் குழு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதே போல், பிரிமியர் ரோலர் மில் வழக்கிலும், வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த இரண்டு வழக்கிலும் சிக்கியுள்ள வீரபாண்டி ஆறுமுகம், முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், ஜூலை 25 (நாளை) முதல், சேலம் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்புக் குழுவில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து, அவர் நாளை சேலத்தில் ஆஜராக உள்ளார்.சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்புறம் நில அபகரிப்பு மீட்புக் குழு அலுவலகம், மிகவும் குறுகலான சந்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு அதிகபட்சம், 30 பேர் மட்டும் சென்று வர இயலும். அத்துடன் விசாரணையின் போது, வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்கறிஞர், டாக்டர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொள்ளும் பட்சத்தில், அவர்கள் நிற்கக் கூட இடம் இருக்காது.முன்னாள் அமைச்சர் ஆஜராகும் நிலையில், அவரது ஆதரவாளர்கள், சேலத்தில் அதிக அளவில் கூடுவர். குறிப்பாக, ரவுடிகள் அதிக அளவில் ஒரே இடத்தில் கூட வாய்ப்புள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட சாத்தியம் உள்ளதாக, சேலம் மாநகர போலீஸ் சார்பில், அரசுக்கும், தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ்க்கும், அறிக்கை அனுப்பினர்.இந்த அறிக்கையை அடுத்து, சேலம் மாநகரில் உள்ள, 11 போலீஸ் ஸ்டேஷன், புறநகரில் உள்ள, 33 போலீஸ் ஸ்டேஷன்களிலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களாக செயல்படும், ரவுடிகளின் பட்டியலை உடனடியாக தயார் செய்து, அவர்களை கண்காணிக்கும்படி, உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும், உத்தரவு பிறப்பித்துள்ளது.ரவுடிகள் பட்டியல் தயார் செய்து, அவர்களை கைது செய்தாலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவு போலீஸ் அதிகாரிகளால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை மட்டுமின்றி, வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.தலைமறைவானவர்களை கைது செய்ய முடியாமல் திணறல்:அங்கம்மாள் காலனி நில விவகார வழக்கில், போலீசார், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி., கிருஷ்ணசாமி, உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள், மாஜி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி ஆகிய 13 பேர் மீது, எட்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில், காங்கிரஸ் பிரமுகர் எம்.ஏ.டி., கிருஷ்ணசாமி, கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள் ஆகியோர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், காங்கிரஸ் பிரமுகர் உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், சித்தானந்தம், மாஜி ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி உட்பட எட்டு பேரை, கைது செய்ய முடியாமல் போலீசார் தவிக்கின்றனர்.இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக, 12 தனிப்படையை அமைத்துள்ளதாக கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்தார். ஆனால், ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டு இருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது.இந்தக் குழு சில தினங்களாக சென்னையில் முகாமிட்டும், முன்னாள் அமைச்சரை கைது செய்யாமல், ஐகோர்ட் உத்தரவை காரணம் காட்டி, நேற்று சேலம் திரும்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை