மேலும் செய்திகள்
டாஸ்மாக் வழக்கை மாற்றுங்கள்: தமிழக அரசு மனு
05-Apr-2025
சென்னை:'பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதால், என் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால், கிரானைட் குவாரி ஊழல் வழக்கில் ஆஜராகி, ஆதாரங்களை சமர்ப்பிக்க இயலவில்லை' என, அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கடிதம் எழுதி உள்ளார்.நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டராகவும், மாநில அரசு துறைகளில் செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலும் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் சகாயம். 2014ல், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, மதுரை மாவட்டத்தில் நடந்து வந்த கிரானைட் குவாரி ஊழலை வெளிக்கொண்டு வந்தார். அரசுக்கு அவர் தாக்கல் செய்த, 600 பக்க அறிக்கையில், கிரானைட் குவாரிகளில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.இந்த ஊழல் வழக்கு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சகாயம் சாட்சியம் அளிக்க வேண்டிய நிலை இருந்தது; அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதற்கு விளக்கம் அளித்து, அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு, அவர் அனுப்பிஉள்ள கடிதம்:எனக்கு மாநில அரசு அளித்து வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது. இது தவறானது; முறையற்றது. கிரானைட் குவாரி முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், என் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராகி, ஆதாரங்களை சமர்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார். சமீபத்தில், சமூக ஆர்வலர்களான புதுக்கோட்டை ஜெகபர் அலி, திருநெல்வேலி ஜாகிர் உசேன் ஆகியோர் கொலை செய்யப்பட்டதையும், கடிதத்தில் சகாயம் சுட்டிக்காட்டி உள்ளார்.
05-Apr-2025