சென்னை : விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நல வாரியத்தைக் கலைக்கும் சட்ட மசோதாவுக்கு, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மார்க்., கம்யூ., - பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் - கிருஷ்ணசாமி, காங்., - விஜயதாரணி, இ.கம்யூ., - பொன்னுபாண்டி ஆகியோர், சட்டமாக இருந்தால், உரிமையுடன் மக்கள் கேட்டுப் பெறுவர் என்றும், திட்டமாக மாற்றினால், அடுத்தடுத்த அரசுகள் மாற்றும் நிலை ஏற்படும் என வலியுறுத்தினர். ஆனால், சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பின் அமைச்சர் தங்கமணி பேசினார். விவரம்: வாரியம் அமைத்ததில், யாருக்கு என்ன பலன்? உறுப்பினர்கள் அங்கு மனு செய்தாலும், வருவாய்த் துறைக்கு அனுப்பி அதன் உத்தரவைப் பெற்ற பின், வாரியத்துக்குச் சென்று, நல உதவிகளைப் பெற வேண்டும். இதனால், அரசுக்கு வீணான செலவைத் தவிர, வேறு எந்தப் பலனும் இல்லை. முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், அனைத்து உறுப்பினர்களும் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்படும். தேசிய பிரத்யேக அடையாள எண் வழங்க உள்ளதால், தனி அடையாள அட்டை கொடுத்து, மற்ற திட்டங்களிலும் பயன்பெறச் செய்ய முடியும்.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தில், ஆறு மாதங்களில் 66 லட்சம் குடும்பங்களைச் சேர்த்து, 2.2 கோடி உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தில், ஐந்து ஆண்டுகளில், 76 லட்சத்து 45 ஆயிரத்து 856 குடும்பங்களைச் சேர்த்து, 1.86 லட்சம் உறுப்பினர்கள் தான் இருந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளில், உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றால், எப்படி வாரியம் செயல்பட்டிருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு, அமைச்சர் விளக்கம் அளித்த பின், குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.