உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஜிட்டலில் பணம் தந்தால் எம்.ஆர்.பி., விலையில் மது 

டிஜிட்டலில் பணம் தந்தால் எம்.ஆர்.பி., விலையில் மது 

சென்னை:'டாஸ்மாக்' கடைகளில், டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கும் போது, எம்.ஆர்.பி., விலையை மட்டுமே, 'ஸ்கேன்' செய்யும் வசதி துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில், டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கும் போது, ஏற்கனவே வங்கிகள் வழங்கிய விற்பனை முனைய கருவி பயன்படுத்தப்படுகிறது. அந்த கருவியில் பணம் செலுத்தும் போது, மது பாட்டிலின் எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச சில்லரை விலையை ஊழியர்கள் பதிவு செய்ய வேண்டும். இதனால், அதை பயன்படுத்தி, அதனுடன் சேர்த்து 20 ரூபாய் வரை கூடுதலாக, ஊழியர்கள் வசூலிக்கின்றனர். பின், விற்பனை விபரம் சரிபார்க்கும் போது, டிஜிட்டல் முறையில் கூடுதலாக வசூலித்த பணத்தை, ரொக்க பணத்தில் இருந்து எடுத்துக் கொள்கின்றனர். தற்போது, கணினி மைய திட்டத்தின் கீழ், கையடக்க விற்பனை கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக, பணம் வழங்க பதிவு செய்யும் போது, மது பாட்டிலை கருவியில், 'ஸ்கேன்' செய்ததும், அதன் விலை என்னவோ அதுதான், 'கியூ ஆர் கோடில்' தெரியும். இதனால், மது பாட்டிலுக்கு உரிய எம்.ஆர்.பி., விலை மட்டுமே செலுத்தினால் போதும். இது, நாமக்கல், மதுரை தெற்கில் சோதனை ரீதியாக கடந்த மாதம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, சென்னை உட்பட பல மாவட்டங்களில், மாவட்டத்துக்கு தலா, 10 - 20 கடைகளில் டாஸ்மாக் அமல்படுத்தி உள்ளது. சில தினங்களில் அனைத்து கடைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை