தர்மபுரி: எந்த திராவிட கட்சிகளும் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.தர்மபுரியில் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: எங்கள் கண்முன்னே எங்கள் கனிமவளம் கொள்ளையடிக்கப்படுகிறது. சமூகநிதிக்கு எதிரான பா.ஜ.,வுடன் இதற்கு முன் திமுக கூட்டணி வைத்தது ஏன்?. மலைகள் இல்லாத நிலம் பாலைவனம் ஆகிவிடும் என்று தெரியாதவர்கள் கையில் ஆட்சி உள்ளது. நீண்ட காலமாக தனித்து நின்று போட்டியிடும் எங்களது அரசியல் இதுவரை இல்லாத தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல். ஜாதிவாரி கணக்கெடுப்பு
எந்த திராவிட கட்சிகளும் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாது. காரணம் தமிழர் அல்லாதவர்கள் எத்தனை பேர் இட ஒதுக்கீடு மூலம் பலன் அடைகிறார்கள் என்பது தெரிந்துவிடும். பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கிறார். மாநில அரசே முடிவு செய்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறார்கள். அள்ளி கொடுக்காதீர்கள், அளந்து கொடுங்கள்!
எடுத்து கொடுக்காதீர்கள். எண்ணி கொடுங்கள். அள்ளி கொடுக்காதீர்கள், அளந்து கொடுங்கள். 5 பேர் இருக்கும் வீட்டிற்கு 50 பேர் சாப்பிடும் சாப்பாடை அனுப்பாதீர்கள். 50 பேர் இருக்கும் இடத்தில் 5 பேர் சாப்பிடும் சாப்பாட்டை அனுப்பாதீர்கள். இது சமூக நிதி அல்ல. அநீதி. 50 பேர் இருக்கும் வீட்டிற்கு 50 பேர் சாப்பிடும் சாப்பாட்டை அனுப்புங்கள். இது தான் சமூக நீதி. சமமான பங்கீடா
ஒரு குடும்ப அட்டைக்கு 10 கிலோ அரிசி என்றால், ஒரு வீட்டில் வயதான பாட்டி இருப்பார், அவருக்கு 10 கிலோ அரிசி கொடுக்கிறார்கள். 10 பேர் இருக்கும் குடும்பத்தில், ஒரு குடும்ப அட்டை வைத்து இருப்பார்கள் அவர்களுக்கு 10 கிலோ அரிசி என்றால், இது சமமான பங்கீடா என்று யோசித்து பாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
செல்பியால் சலசலப்பு
கிருஷ்ணகிரி வேட்பாளரான வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு ஆதரவாக நேற்றிரவு (ஏப்.,7) சீமான் பிரசாரம் மேற்கொண்டார். மேடையில் பாடல் பாடியபடி சீமான் உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென ஓடி வந்த இளைஞர் செல்பி எடுக்க முயன்றார். இதனால், ஆத்திரமடைந்த சீமான் இளைஞரின் செல்போனை பறித்து தூக்கி எறிந்தார். அங்கிருந்த நிர்வாகிகள் இளைஞரை மேடையில் இருந்து வெளியேற்றினர். பிரசாரத்திற்கு இடையே செல்பி எடுக்க இளைஞர் அத்துமீறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.