உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: வரும் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: வரும் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம். இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், இன்று முதல், 15ம் தேதி வரை கனமழை கொட்ட துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்டோபர், 15ல் துவங்கியது. அதன்பின், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகள், தமிழக கரையை நெருங்காத நிலையிலும், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.வடகிழக்கு பருவமழை துவங்கி, 20 நாட்களுக்கு மேலாகியும், பெரும்பாலான கடலோர மாவட்டங்களில், இயல்பை விட குறைந்த அளவிலேயே மழை பெய்துள்ளது. இதனால், கனமழைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகலாம்.இது, தமிழகம் - இலங்கை கரையை நோக்கி, நாளை அல்லது நாளை மறுநாள் மெதுவாக நகரக்கூடும். இதற்கு இணையாக, தென்கிழக்கு அரபிக்கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று நிலவரப்படி, தெற்கு அரபிக்கடலின் மையப்பகுதிக்கு நகர்ந்துள்ளது.இப்பின்னணியில், தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 15ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடரலாம்.இன்றும், நாளையும்தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், நாளை மறுதினம் கனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், 13ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.14,15ல் கனமழைசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், வரும் 14, 15ம் தேதிகளில் கனமழை பெய்யலாம்.சென்னையில்...சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இடைவேளை தற்காலிகம் தான்!

'தமிழக வெதர்மேன்' மையத்தின் தன்னார்வ வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழையில் தற்போது கிடைத்திருக்கும் இடைவேளை தற்காலிகமானது தான். நாளை மறுதினம் முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை கொட்ட நல்ல வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் போது, அதன் வெளிச்சுற்று பகுதி டெல்டா முதல் தென் மாவட்டங்களின் மீது அமையக் கூடும். இது, கன மழையை கொடுக்கும் என, வரைபடங்கள் வாயிலாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

எங்கு செல்லும்?

தன்னார்வ வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகம், இலங்கைக்கு அருகில் நிலவும் வளி மண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் போது, தென்மேற்கு வங்கக்கடலில், அந்தமான் அருகில் நிலவும் வளி மண்டல சுழற்சியும், அதனுடன் இணைய வாய்ப்புள்ளது. இதன்பின், காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மாவட்டங்களை கடந்து, கேரளா வழியாக அரபிக்கடலுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இந்த நகர்வு சமயத்தில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கனமழையை பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
நவ 10, 2024 09:14

பெய்த மழை கட்டடங்கள் வீடுகளை சுற்றி உள்ள குப்பை கூளங்கள் வழி பாதை அடைப்புகளால் நீர் ஓட்டம் இல்லை என்பதனையும் பெய்த மழையை நிறைவை தருகிறதா என்பதனையும் கூறுவது ஊடகங்களின் பொறுப்பு ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை