கொலை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு கார் விபத்து குறித்து மதுரை ஆதீனம் பேட்டி
சென்னை:கார் விபத்தை ஏற்படுத்தி, தன்னை கொல்ல சதி நடந்துள்ளதாக, மதுரை ஆதீனம் குற்றம் சாட்டினார். மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமார்ச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டி:சென்னையில் நடக்கும் சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, மதுரையில் காலை, 5:30 மணிக்கு பூஜை முடித்துவிட்டு, 6:00 மணிக்கு கிளம்பி, சென்னையை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தோம். உளுந்துார்பேட்டை அருகே வந்த போது, திரும்பும் இடத்தில், சாலை தடுப்பை இடித்து தள்ளியபடியே வந்த ஒரு கார், என் காரை வந்து இடித்தது. அந்த விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில், நிலைகுலைந்து மயக்கமாகி விட்டேன். என் டிரைவர், இடித்தவர் யார் என பார்க்கும் போது, அவர் தொப்பி அணிந்து, தாடி வைத்திருந்தார். அந்த காரில், 'நம்பர் பிளேட்' இல்லை. இது தொடர்பாக, போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை. சிவபெருமானிடம் புகார் அளித்துள்ளேன். இங்கு சிறுபான்மையினருக்கு தான் சலுகைகள், அப்படி இருக்கும்போது, நான் புகார் கொடுத்தால் எடுக்காது.இவ்வாறு கூறினார்.'மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., மற்றும் ஹிந்து மக்கள் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: அன்னை மீனாட்சி சொக்கநாதர் அருளால் தப்பிய மதுரை ஆதீனம், தன்னை கொல்ல சதி நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் முறையிட போவதாகவும் தெரிவித்துள்ளார்.ஹிந்துக்களுக்காக குரல் கொடுத்து வரும் மதுரை ஆதீனம், இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு, கோவில் சொத்துக்கள் மீட்பு, சைவம் மற்றும் தமிழ் வளர்ச்சிக்காக பல நற்பணிகளை செய்து வருபவர். இதனால், அவர் மீது விமர்சனங்களும், மிரட்டல்களும் எப்போதும் உண்டு. எனவே, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.தமிழக பா.ஜ., ஆன்மிக பிரிவு தலைவர் நாச்சியப்பன்: சனாதனத்தை அழிப்போம் என்று கூறி, தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசில், கோவில்களுக்கும், ஆன்மிக குருமார்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து, ஒரு திட்டமிட்ட சதி. இறையருளால் ஆதீனத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. விபத்து ஏற்படுத்தியவர்களை உடனே கைது செய்வதுடன், மதுரை ஆதீனத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.