சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மதுரை ஆதீனம் ஆஜராக மீண்டும் சம்மன்
சென்னை:மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு பின், பாரம்பரியம் மிக்க ஆதின மடத்தின், 293 வது ஆதீனமாக, கடந்த, 2021ல், ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டார். இவர், கடந்த மே 2ம் தேதி, சென்னை, காட்டாங்கொளத்துார் பகுதியில் நடந்த, அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க, அன்று காலை மதுரையில் இருந்து காரில் புறப்பட்டார். ஆதீனத்தின் கார், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையை கடந்த போது விபத்தில் சிக்கியது.இது குறித்து பேசிய ஆதீனம், 'தாடி வைத்த, குல்லா அணிந்த இருவர், நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்து, என்னை கொலை செய்ய முயற்சித்தனர்' என்றார். ஆதீனத்தின் ஓட்டுநரும் இந்த கருத்தை 'வாட்ஸ் அப்' மூலமாக பரப்பினார். விசாரணையில், மதுரை ஆதீனத்தின் கார், மற்றொரு கார் மீது மோதியது தெரியவந்தது. இது தொடர்பாக, ஆதீனத்தின் ஓட்டுநர் செல்வக்குமார் மீது, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சென்னையை சேர்ந்த வக்கீல் ராஜலிங்கம் என்பவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய புகாரில், 'மதுரை ஆதீனம் பொய்யான குற்றச்சாட்டுகள் மூலமாக, இரு மதத்தினரிடம் மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். வெறுப்பு மற்றும் பகை உணர்வுகளை துாண்டுகிறார். இது சட்டம், ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். இதனால், மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.இப்புகார் மீது, சென்னை கிழக்கு மண்டல 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து, மதுரை ஆதீனம் மீது, இரு மதத்தினரிடம் மோதலை ஏற்படுத்த முயற்சி செய்தல் உட்பட, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு வரும், 5ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேரில் ஆஜராக வேண்டும் என, சம்மன் வழங்கி உள்ளனர். ஏற்கனவே சம்மன் அனுப்பி, அவர் ஆஜராகாததால், இரண்டாம் முறை சம்மன் அனுப்பி உள்ளனர்.