2027க்குள் 18,000 வகுப்பறை மகேஷ் உறுதி
சென்னை : சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:அ.தி.மு.க., - ராதாகிருஷ்ணன்: பொள்ளாச்சி அடுத்த மாக்கிளாம்பட்டி ஊராட்சியில், உயர்நிலை பள்ளிக்கு கட்டடம் கட்டுவது தாமதமாகி வருகிறது. அங்குள்ள மூன்று மரங்களை அகற்ற, பொதுப்பணித்துறை காலதாமதம் செய்கிறது. எனவே, கட்டடத்தை விரைந்து கட்ட நடவடிக்கை தேவை.பள்ளிகல்வி துறை அமைச்சர் மகேஷ்: இப்பிரச்னையை பொதுப்பணித்துறை அமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று, மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அரசு பள்ளிகளில் சேரக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.அதற்கேற்ப வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள் உள்ளிட்டவை கட்ட, 7,500 கோடி ரூபாயில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவரை இத்திட்டத்திற்கு, 3,497 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், 7,756 வகுப்பறைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளன.மேலும், 6,353 வகுப்பறைகள், 353 ஆய்வகங்கள் கட்டப்படுகின்றன. வரும் 2027க்குள், 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.