காவலாளியை 9 துண்டுகளாக வெட்டி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
சென்னை,:தனியார் நிறுவன காவலாளியை கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய வழக்கில், கடலுாரைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகா பாசிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 31. இவருக்கு நிதி நெருக்கடி இருந்துள்ளது. அதன் காரணமாக, தனக்கு ஏற்கனவே அறிமுகமான சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணி செய்து வந்த வெங்கட்ராவ் என்பவரை ஏமாற்றி, அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார்.அதன்படி, கடந்த 2014ம் ஆண்டில், சென்னையில் வெங்கட்ராவை சந்தித்த வேல்முருகன், சென்னை துறைமுகத்தில் உயர் பதவியில் இருக்கும் சிலரை தனக்கு தெரியும் என்றும், 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், அங்கு 40,000 ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளார்.இதை உண்மை என நம்பிய வெங்கட்ராவ், தன் சகோதரியின் நகையை அடகு வைத்து, 1 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்துள்ளார். இதன்பின், சிந்தாதிரிபேட்டையில் வேல்முருகன் தங்கியிருந்த விடுதிக்கு பணத்தை கொடுக்கச் சென்றார்.பணத்தை பெற்ற வேல்முருகன், அவரை கொலை செய்ய திட்டமிட்டு கம்பியால் தாக்கினார். இதில் வெங்கட்ராவ் உயிரிழந்தார். பின், உடலை யாருக்கும் தெரியாமல் விடுதியில் இருந்து எடுத்து செல்வதற்காக, தலை, கை, கால் ஆகியவற்றை தனித்தனியாக ஒன்பது துண்டுகளாக வெட்டி, பாலிதீன் பைகளில் போட்டு எடுத்து சென்றார்.பின், உடல் பாகங்களை தன் சொந்த ஊரான பாசிக்குளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாயில் வீசியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக, சிந்தாதிரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேல்முருகனை கைது செய்தனர்.விசாரணை, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம், கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, வேல்முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 18,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.