கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
சென்னை:கேரள வனப்பகுதிக்குள் ஊடுருவி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில மாவோயிஸ்டுகள் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில், தமிழகம், கேரளா மற்றும் க ர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, எட்டுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள், கடந்த 2023, நவம்பரில் ஊடுருவினர். அவர்களை பிடிக்க முயன்ற போலீசார் மற்றும் கேரள மாநில காவல் துறையின், மாவோயிஸ்ட் ஒழிப்பு பிரிவான, 'தண்டர்போல்ட்' கமாண்டோ பிரிவு போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அப்போது, ஒரு பெண் உட்பட இரண்டு மாவோயிஸ்டுகளுக்கு காயம் ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் தப்பினர். விசாரணையில், அவர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த் என்ற ரமேஷ் என்பது தெரிய வந்தது. கோவையில் பதுங்கி இருந்த சந்தோஷ் கைது செய்யப்பட்டார். தற்போது, கேரள மாநில வனப்பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய, மாவோயிஸ்ட் மற்றும் அவர்களை இயக்கிய நபர்கள் குறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், விசாரணையை துவக்கி உள்ளனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்துள்ளனர்.