உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுபான சிண்டிகேட் அமைத்து மெகா ஊழல் ரூ.1,000 கோடி ! மாஜி முதல்வர் மகன் மீது ஈ.டி., குற்றப்பத்திரிகை

மதுபான சிண்டிகேட் அமைத்து மெகா ஊழல் ரூ.1,000 கோடி ! மாஜி முதல்வர் மகன் மீது ஈ.டி., குற்றப்பத்திரிகை

ராய்ப்பூர், 'சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா பாகேல், அரசு மதுபான கடைகளுக்கு, மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்வதற்காக, 'சிண்டிகேட்' எனப்படும் ரகசிய குழு அமைத்திருந்தார்' என, ஈ.டி., எனப்படும், அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், மதுபான பாட்டில்கள் கொள்முதல் மூலம் தனிப்பட்ட முறையில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு அவர் ஊழல் செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கரில், அரசு நடத்தி வரும் மதுபான கடைகளுக்கு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. 2019 - 23 வரை முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அப்போது மதுக்கடைகளுக்கு மதுபானங்களை கொள்முதல் செய்ததில் மிகப் பெரிய ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2023ல் பா.ஜ.,வை சேர்ந்த விஷ்ணு தியோ சாய் முதல்வராக பொறுப்பேற்றதும், மதுபான ஊழல் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மாநில பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியது. நெருங்கிய தொடர்பு அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதில், 2019 - 23 வரை பூபேஷ் பாகேல் ஆட்சியின் போது மதுபான பாட்டில்கள் கொள்முதல் செய்ததில், 2,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டது. தவிர, இந்த ஊழலில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா பாகேலுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்த ஈ.டி., கடந்த ஜூலை 18ல், துர்க் மாவட்டம், பிலாயில் உள்ள பூபேஷ் பாகேல் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததை அடுத்து, பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா பாகேலை ஈ.டி., அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், ஊழலுக்கு உறுதுணையாக இருந்ததாக, 29 அரசு அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மதுபான பாட்டில்கள் கொள்முதல் செய்வதற்காக ரகசிய குழு அமைத்து, 1,000 கோடி ரூபாய் வரை தனிப்பட்ட முறையில் சைதன்யா பாகேல் ஊழல் செய்து சம்பாதித்திருப்பதாக ஈ.டி., தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தமருதர் சவுகான் முன், ஈ.டி., நான்காவது துணை குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தது. ரகசிய குழு அதில் கூறப்பட்டுள்ளதாவது: மதுபான ஊழலுக்காக சைதன்யா பாகேல் தனியே ரகசிய குழு ஒன்றை இயக்கி வந்தார். இதற்காக முந்தைய காங்., ஆட்சியின்போது மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனில் துடேஜா, அப்போதைய கலால் துறை தலைவர் திரிபாதி, தொழிலதிபர் அன்வர் தபேர் தலைமையில் ரகசிய குழு அமைக்கப்பட்டது. தலைவராக சைதன்யா செயல்பட்டார். ரகசிய குழு மூலம் ஊழல் செய்து பெறப்படும் பெருந்தொகையை சைதன்யா தான் கையாண்டு வந்தார். முதல்வர் மகன் என்பதால், இந்த குழுவின் மொத்த கட்டுப்பாடும் அவரிடமே இருந்தது. இந்த குழு மூலமாகவே மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்து, அரசு மதுபான கடைகளுக்கு வினியோகித்துள்ளனர். இதன் மூலம் அவர் மட்டும் தனிப்பட்ட முறையில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு சம்பாதித்துள்ளார். அந்த ஊழல் பணத்தை, தான் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து, வெள்ளையாக மாற்றினார். விசாரணையில், லஷ்மி நாராயண் பன்சால் என்பவர் இந்த ஊழல் மூலம் பெருந்தொகை சம்பாதிக்கப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். சைதன்யாவின் அறிவுறுத்தலின்படி அந்த பணத்தை மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம் கோபால் அகர்வாலிடம் தான் அவ்வப்போது கொடுத்து வந்ததாகவும், பன்சால் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தொழிலதிபர் அன்வர் தபேர் வழியாகவே காங்., பொருளாளர் ராம் கோபால் அகர்வாலுக்கு பணம் கைமாறியதாக, பன்சால் கூறியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை