திராவிட மாடல் ஆட்சியில் நிரம்பும் மேட்டூர் அணை: அமைச்சர் வேலு
திருச்சி: “எங்களின் திராவிட மாடல் ஆட்சியில், மேட்டூர் அணை அடிக்கடி நிரம்புகிறது,” என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு தெரிவித்தார். திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, காவிரி பாலம் அருகே, புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு, 106 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. இந்நிலையில், புதிய காவிரி பாலப்பணிகளை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், அமைச்சர் வேலு கூறியதாவது: காவிரியில் ஏற்கனவே உள்ள பாலம், தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது, போக்குவரத்து பிரச்னையை தவிர்ப்பதற்காக, புதிய பாலமும் தி.மு.க., ஆட்சியிலேயே கட்டப்படுகிறது. தற்போது பாலப்பணிகள் நடக்கின்றன. அணுகு சாலைகளுக்கு, தனியார் இடங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மொத்தம் அமைக்கப்பட வேண்டிய 120 துாண்களில், 84 துாண்கள் அமைக்கப்பட்டு விட்டன. நாம் நினைக்காத போதெல்லாம் காவிரி ஆற்றில் தண்ணீர் வருகிறது. எங்களின் திராவிட மாடல் ஆட்சியில் தான், மேட்டூர் அணை அடிக்கடி நிரம்பி வழிகிறது. இதனால், காவிரியில் தண்ணீர் வரத்து இருந்து கொண்டே இருப்பதால், பாலம் கட்டுவது தாமதமாகிறது. வரும் பிப்., 15ம் தேதிக்குள் பாலப்பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.