அரிய ரத்த வகை நோயாளிக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை: உலகில் முதல் முறையாக மியாட் மருத்துவமனை அசத்தல்
புதுச்சேரி: உலகில் முதல் முறையாக அரிய ரத்த வகை நோயாளிக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை சென்னை மியாட்டில் வெற்றிகரமாக செய்யப்பட்டது.'பி-பாசிடீவ்' ரத்த வகை கொண்ட மாலத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் நோய் இருந்தது. மேலும் அவருக்கு மண்ணீரல் விரிவாக்கம், நீரிழிவு, தைராய்டு, கொழுப்பு மற்றும் இதய நோய்களும் இருந்தன.கல்லீரலில் சிரோசிஸ் இருந்ததால், அவசர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. நாள்பட்ட கல்லீரல் நோய் காரணமாக உணவுக்குழாயில் உள்ள நரம்புகள் பெரிதாகி மேல் இரைப்பை குடல் ரத்தப்போக்குக்கு வழிவகுத்தது. இதனால் ரத்த வாந்தி, அடிக்கடி மூக்கில் ரத்த கசிவு என உயிருக்கு ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டன.அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிவதை கண்டு வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடைசி நம்பிக்கையாக மாலத்தீவில் உள்ள மியாட் மருத்துவமுகாமிற்கு சென்றார். மியாட்டின் இரைப்பை, குடல்பை நிபுணர்கள் அவரை பரிசோதித்து மூக்கில் ரத்தம் வடிதலை நிறுத்தினர்.உலகளாவிய ரத்த தானம் செய்பவர்களுக்கான ரத்த வகையான 'ஓ-பாசிடீவ்' ரத்த வகை கொண்ட அவரது மகன் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய முன் வந்தார். அதையடுத்து சென்னை மியாட்டில் அவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்ய பரிசோதனை நடந்தது. அங்குதான் புதிய சிக்கலும் உருவானது.அதாவது அவருக்கு ஆன்டி கிட் ஜே.கே., (பி) எனும் ஆன்டிபாடி பாசிடீவ் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஆசிய மக்களிடையே அரிதான ரத்த வகை ஆகும். கிட் ஆன்டிஜன்ஸ் ஆர்.பி.சி,க்கள் மற்றும் சிறுநீரகங்களில் சவ்வில் மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன. அதன் குறைந்த டைட்டர்கள், நிலையற்ற தன்மை காரணமாக வழக்கமான சோதனையில் கண்டறிவது மிகவும் கடினம்.இந்த ரத்த குழு கண்டறியப்படாமல் பொருந்தாத ஆன்டி கிட் ஜே.கே.,(பி) ஆன்டிபாடி நெகட்டிவ் ரத்தத்துடன் மாற்றப்பட்டால் உடல் முழுவதும் உள்ள சிறிய நாளங்களில் ரத்த உறைவு, ரத்த போக்கு ஏற்படும். மேலும் இத்தகை பொருத்தமின்மை ரத்த சிவப்பணுக்களின் அழிவுக்கும் கடுமையான சிறுநீரக காயம் போன்ற கடுமையான சிக்கல்களுக்கும் வழி வகுக்கும். இதன் விளைவாக மரணம் ஏற்படலாம்.மியாட் மருத்துவ குழுவினர் இதனை சவாலாக எடுத்துக் கொண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிக்கரமாக செய்து, நோயாளியை காப்பாற்றியுள்ளனர்.இந்த வெற்றிக்கரமான அறுவை சிகிச்சை செய்த மியாட் இன்டர்நேஷனல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்ட இயக்குநர் கார்த்திக் ராஜ், கல்லீரல் மற்றும் பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்ட இயக்குநர் கார்த்திக் மதிவாணன், ரத்தமாற்ற மருத்துவ துறை தலைவர் ஜோசுவா டேனியல் ஆகியோரை மியாட் இன்டர்நேஷனல் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் பாராட்டினார்.