பத்திரப்பதிவு வருவாய் அதிகரிக்க நில மதிப்பு உயர்ந்ததே காரணம் அமைச்சர் விளக்கம்
சென்னை: 'பதிவு கட்டண வருவாய் அதிகரிப்புக்கு, நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததே காரணம்,'' என, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - சுந்தரராஜன்: தி.மு.க., ஆட்சியில், வழிகாட்டி மதிப்பு, பதிவு கட்டண உயர்வால், பத்திரப்பதிவு வருவாய் அதிகரித்துள்ளது. 2024- - 25ல் மட்டும் பத்திரப்பதிவு வாயிலாக, 21,968 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. வியர்வை சிந்தும் உழைப்பாளர்களிடம் இருந்து, அரசுக்கு இந்த வருவாய் கிடைத்துள்ளது.அமைச்சர் மூர்த்தி: கடந்த 2011 முதல் 2021 வரையிலான, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், பத்திரப்பதிவு வாயிலாக, 88,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ஆனால், கடந்த நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில், 72,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டையும் சேர்த்து, 98,000 கோடி ரூபாய் வருவாய் வரும்.அ.தி.மு.க., ஆட்சியில், 2012ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 2017 வரை நடைமுறையில் இருந்தது. அதைத்தான் இப்போது நடைமுறைப்படுத்தி உள்ளோம். மேலும், தற்போது நிலத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. நிலத்தின் மதிப்பில், 50 சதவீதம் தான் அரசின் வழிகாட்டி மதிப்பாக உள்ளது. நிலத்தின் மதிப்பு உயர்வால் தான், பத்திரப்பதிவு கட்டண வருவாய் அதிகரித்துள்ளது. ஒரு சில இடங்களில் வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தால், அதற்கென அமைக்கப்பட்டுள்ள கமிட்டி வாயிலாக ஆய்வு செய்யப்பட்டு, சரி செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
ஒரே ஆண்டில் ரூ.3,143 கோடி
பத்திரப்பதிவு வருவாய் உயர்வு தமிழகத்தில், 2024 - 25ம் நிதி ஆண்டில் பத்திரப்பதிவு வருவாய், 21,968 கோடி ரூபாயை எட்டி உள்ளது. ஒரே ஆண்டில், 3,143 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகியுள்ளது. தமிழகத்தில், 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ஒவ்வொரு ஆவணத்தையும் பதிவு செய்ய முத்திரைத்தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இந்த வகையில், 2023 - 24ல் பத்திரப்பதிவு வருவாய், 18,825 கோடி ரூபாயாக வசூலான நிலையில், 2024 - 25ம் நிதி ஆண்டில், 21,968 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில், 3,143 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகி உள்ளது என, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, இத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2024 - 25ம் நிதியாண்டில், 33.59 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன. இது, முந்தைய ஆண்டை விட, 1.09 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டு / வருவாய் ரூ. கோடியில் / பத்திரங்கள் எண்ணிக்கை 2021 - 22 / 13,913.65 / 29,98,0482022 - 23 / 17,296.84 / 34,41,248 2023 - 24 / 18,825.32 / 33,22,8572024 - 25 / 21,968.24 / 33,59,175 ***