திருச்சி மக்களின் உடல்நிலை பாதிப்பு அமைச்சர் நேருவுக்கு கடும் கண்டனம்
திருப்பூர்:திருச்சி மக்கள் உடல்நிலை பாதிப்பு குறித்து அமைச்சர் நேரு கூறிய கருத்துக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:திருச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குடிநீரில், கழிவுநீர் கலந்து இருந்ததே அதற்கு காரணம் என கூறப்படுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை, எப்போதும் இருந்து வருபவை தான்.இது குறித்து சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் நேரு, 'குடிநீரில் பிரச்னை இல்லை என்றும், திருச்சி - உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் வழங்கிய அன்னதான உணவு, குளிர்பானங்களால் நோய் தொற்று இருக்கலாம்' எனவும் பதில் அளித்துள்ளார். இது போன்ற பதில், தி.மு.க.,வின் ஹிந்து விரோத போக்கையே காட்டுகிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல், ஹிந்துக்கள் புண்ணியமாக கருதி, சுகாதாரமாக தயாரித்து வழங்கும் அன்னதானம் பற்றி அவதுாறு பரப்புவது, தி.மு.க.,வின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.கோவில் விழாக்களில், வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். அதை, மத நல்லிணக்கம் என விளம்பரப்படுத்தி பாராட்டுகிறது தி.மு.க., அரசு.எந்த முகாந்திரமும் இல்லாமல் அமைச்சர் நேரு, கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.அமைச்சர் நேரு, தெய்வ நம்பிக்கை உடையவர், அவர், தான் சார்ந்து இருக்கும் இயக்கத்தின் தலைவர்களுக்காக இப்படி பேசியுள்ளார். அதை கண்டிக்கிறோம். மக்கள் பாதிப்புக்கு வெக்காளியம்மன் கோவிலில் வழங்கிய அன்னதான உணவு காரணம் என, அமைச்சர் நேரு கூறியததை, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க, சபாநாயகரிடம் முறையிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.