அமைச்சர் பெரியசாமி கருத்து குப்பை: காங்., - எம்.பி., விளாசல்
காங்கிரஸ் கட்சி குறித்து அமைச்சர் பெரியசாமி கூறிய கருத்தை, 'குப்பை' என கார்த்தி சிதம்பரம் எம்.பி., விமர்சித்துள்ளார். மேடையில் இருந்த ஜோதிமணி எம்.பி., எதிர்ப்பு தெரிவிக்காதது, காங்கிரஸ் கட்சியினரிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் தெற்கு ஒன்றிய செயலர் வீராசாமியின் இல்ல திருமண விழாவில் அமைச்சர் பெரியசாமி பேசுகையில், ''மேடையில் ஜோதிமணி கூட இங்கே இருக்கிறார். ''ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர்கள், பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு தான் வருவர். ஆனால், தி.மு.க.,வை பொறுத்தவரை, சாமானியர்களை உயர்த்தி பிடித்து, அவர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய கட்சி. அதை சொல்வதற்காகவே காங்கிரசோடு ஒப்பிட்டு பேசுகிறேன்,'' என்றார். அமைச்சரின் பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்திலும், காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், தன் சமூக வலைதள பக்கத்தில், 'பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிக்கே காங்கிரஸ் தலைவர்கள் வருவர் என்ற அமைச்சர் பெரியசாமியின் கருத்து ஒரு குப்பை' என குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்தை ஆதரித்தும், பெரியசாமி மற்றும் ஜோதிமணியை விமர்சித்தும், காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, மேடையில் அமைச்சர் பெரியசாமி, காங்கிரசை விமர்சித்து பேசும்போது, அருகில் இருந்த ஜோதிமணி, அக்கருத்தை எதிர்க்காதது ஏன் என்ற கேள்வியை முன் வைத்து, ஜோதிமணியை மிகக் கடுமையாக காங்கிரசார் விமர்சிக்கின்றனர். - நமது நிருபர் -