உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்மை நிலை புரியாமல் அரசியல் செய்ய வேண்டாம்: பழனிசாமிக்கு அமைச்சர் பதில்

உண்மை நிலை புரியாமல் அரசியல் செய்ய வேண்டாம்: பழனிசாமிக்கு அமைச்சர் பதில்

சென்னை: 'உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அரசியல் செய்ய வேண்டாம்' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துஉள்ளார். 'ரேஷன் கடைகளில் கோதுமை சப்ளை இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டி இருந்தார். அவரது அறிக்கையில், 'இம்மாதம் 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை, ரேஷன் கடைகளுக்கு, தி.மு.க., அரசு வினியோகம் செய்யவில்லை. 'தி.மு.க., ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் கூட, தி.மு.க., அரசு தோல்வி அடைந்து விட்டது' என கூறி இருந்தார். இதற்கு பதிலளித்து, அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை' என, கூறியிருக்கிறார். மத்திய அரசிடம், தமிழகத்திற்கு அதிக கோதுமை ஒதுக்கீடு செய்யுமாறு, தொடர்ந்து கேட்டு வருகிறோம். கடந்த 2024 ஜன., முதல் அக்., வரை, மாதம் 8,576 டன் மட்டுமே மத்திய அரசால் கோதுமை வழங்கப்பட்டது. பின், 2024 அக்., முதல் 2025 பிப்., வரை 17,100 டன்னாக உயர்த்தப்பட்டதால், தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்பட்டது. ஆனால், மார்ச்சில், பழைய அளவிற்கே மத்திய அரசு குறைத்து விட்டது. இம்மாதம் 8,772 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இம்மாதம் 8ம் தேதி வரை, 5,386 டன் கோதுமை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுஉள்ளது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள், அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். வரும் 15ம் தேதிக்குள், முழு ஒதுக்கீட்டு கோதுமையும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, தடையின்றி விற்பனை செய்யப்படும். குறுவை பருவத்தில், 13.4 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 3,249 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், இதே காலகட்டத்தில் 4.41 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. பழனிசாமி ஆட்சியில், சாதாரண ரக நெல், குவின்டாலுக்கு 1,918 ரூபாய், சன்ன ரகத்திற்கு 1,958 ரூபாய் மட்டுமே வழங்கப் பட்டது. தற்போது, சாதாரண ரகத்திற்கு 2,500 ரூபாய், சன்ன ரகத்திற்கு 2,545 ரூபாய் வழங்கப்படுகிறது. உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றிலும் பழனிசாமி அரசியல் செய்யக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை