உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயதை பார்த்து பழைய பஸ்கள் மாற்றம் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

வயதை பார்த்து பழைய பஸ்கள் மாற்றம் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

சென்னை: ''எல்லா இடத்திலும் பழைய பஸ்கள் ஓடுகின்றன; அவற்றின் வயதை பொறுத்து மாற்றப்படுகின்றன,'' என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறினார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:தி.மு.க., - அப்துல் வஹாப்: பாளையங்கோட்டை, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து, திருநெல்வேலி டவுன் வரை மினி பஸ் இயக்க வேண்டும்.அமைச்சர் சிவசங்கர்: மினி பஸ்கள் இயக்குவது தொடர்பாக, கலெக்டர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தனியார் மினி பஸ்கள் புதிய வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.த.வா.க., - வேல்முருகன்: மினி பஸ்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் இடம் பெற செய்ய வேண்டும்.அமைச்சர் சிவசங்கர்: பெயர் விடுபட்டு இருந்தால், அதை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., - தேன்மொழி: பள்ளி மாணவியர் செல்வதற்கு வசதியாக, திண்டுக்கல் முதல் நிலக்கோட்டைக்கு செம்மப்பட்டி வழியாகவும், திண்டுக்கல் - கொடை ரோடு வழித்தடத்திலும் புதிய பஸ்களை இயக்க வேண்டும். தொகுதியில் ஓடும் பழைய பஸ்களை மாற்ற வேண்டும்.அமைச்சர் சிவசங்கர்: எல்லா இடங்களிலும் பழைய பஸ்கள் ஓடுகின்றன; அவற்றின் வயதை பொறுத்து மாற்றப்படுகின்றன. தொடர்ந்து 15 ஆண்டுகள் ஓடியவை மாற்றப்பட்டு வருகின்றன. தற்போது, 3,500 புதிய பஸ்கள் வந்து உள்ளன. தி.மு.க., - பிச்சாண்டி: மினி பஸ்கள் இயக்கத்தை, மே 1ம் தேதி முதல்வர் துவக்கி வைக்க இருக்கிறார். தனியாருக்கு அதிகளவில் 'பர்மிட்' வழங்கப்பட்டு வருகிறது. 'வீல் பேஸ்' எனும் அடிச்சட்டம் கிடைக்கவில்லை. வீல் பேஸ் அளவை மாற்றினால், உதவியாக இருக்கும். இந்த திட்டத்தை தடுக்க சில சூழல் உருவாகிறது. அனைத்து கிராம மக்களும் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் சிவசங்கர்: முக்கியமான ஆலோசனையை கூறியுள்ளார். வீல் பேஸ் அதிகரித்தால், பெரிய பஸ்களுக்கு பிரச்னை வரும். மினி பஸ் இயக்க அறிவிப்பு வெளியிட்டபோது, பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. நிர்வாக சிக்கல் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, கூடுதல் மினி பஸ்களை, அரசு மருத்துவமனைகள், கல்லுாரிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 1,500 மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை