தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண சாம்சங் அதிகாரிகளுடன் அமைச்சர் பேச்சு
சென்னை:சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன், தொழில் துறை அமைச்சர் ராஜா, சென்னையில் பேச்சு நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி ஆலை உள்ளது. அதில் பணிபுரியும், 900 ஊழியர்கள், மர்ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கேட்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த மாதம் முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவோரின் சங்கத்தை அங்கீகரித்து, அதனுடன் மட்டும் பேச்சு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சாம்சங் ஏற்கவில்லை. இந்நிறுவனம், தமிழகத்தில் மேலும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தால், ஆலை இயங்க முடியாத நிலை ஏற்பட்டால், சாம்சங் தன் முதலீடுகளை வேறு மாநிலங்களுக்கு திருப்ப வாய்ப்புள்ளது. எனவே, சாம்சங் ஆலை பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், தொழில் துறை அமைச்சர் ராஜா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் அடங்கிய குழுவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அமைத்தார்.இதைதொடர்ந்து, அமைச்சர் ராஜா, சாம்சங் நிறுவன அதிகாரிகளுடன், சென்னையில் நேற்று காலை பேச்சு நடத்தினார். இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை சந்தித்து, அமைச்சர்கள் அன்பரசன், கணேசன் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் அதிகாரிகளுடனான பேச்சு குறித்து, அமைச்சர் ராஜா வெளியிட்டுள்ள, 'எக்ஸ்' தள பதிவு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி, சாம்சங் நிறுவன மேலாளர்களுடனான சந்திப்பில், நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க பயனுள்ள உரையாடலை நடத்தினோம். முதல்வர், இப்பிரச்னையில் அமைச்சர்கள் அன்பரசனுடன், நானும், அமைச்சர் கணேசனும் இணைந்து, தொழிலாளர்களுக்கு நன்மையான தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள உத்ரவிட்டுள்ளார்.சாம்சங் நிர்வாகத்தினரும், அவர்களின் தொழிலாளர்களும் இணைந்து, எல்லா தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவர் என, உறுதியுடன் நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.