85 சதவீத நிலம் கையகப்படுத்திய பிறகே புறவழிச்சாலை அமைப்பு அமைச்சர் வேலு திட்டவட்டம்
சென்னை: ''புறவழிச்சாலைகள் அமைக்க, 85 சதவீத நில எடுப்பு பணிகள் முடிந்த பின்னரே, திட்ட மதிப்பீடு தயாரித்து, பணிகள் மேற்கொள்ளும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன,'' என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சட்டசபையில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - செங்கோட்டையன்: போக்குவரத்து நெரிசலால், நீண்ட நெடுங்காலமாக கோபி செட்டிபாளையத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு புறவழிச்சாலை அமைத்து தர வேண்டும். அமைச்சர் வேலு: கோபி செட்டிப்பாளையம் புறவழிச்சாலை பணிக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நடக்கிறது. பா.ம.க., - சதாசிவம்: தொப்பூர் - பவானி சாலை, 149 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மேச்சேரியை கடப்பதற்கு, 20 நிமிடங்கள் ஆகின்றன. வாகன நெரிசலை குறைக்க, மேச்சேரி புறவழிச்சாலை அமைக்க வேண்டும். ம.ம.க., - அப்துல் சமது: மணப்பாறை நகராட்சியில் நெரிசலுக்கு தீர்வு காண புறவழிச்சாலை அமைக்க, நில எடுப்பு பணி நடக்கிறது. எப்போது அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும்? அமைச்சர் வேலு: புற வழிச்சாலைகள் அமைக்க, வாகனங்கள், பொது மக்கள் நடமாட்டம் தொடர்பான போக்குவரத்து செறிவு கணக்கெடுக்கப்படும். அரசு விதிகளுக்கு உட்பட்டு வாகனங்கள் நெரிசல் இருந்தால் புறவழிச்சாலை அமைக்கப்படும். முன்பு, நில எடுப்பு பணிகளை முடிக்காமல் டெண்டர் கோரியதால், பல விமர்சனங்கள் எழுந்தன. இப்போது, 85 சதவீத நில எடுப்பு பணிகள் முடிந்த பிறகே, திட்ட மதிப்பீடு தயாரித்து, புறவழிச்சாலை பணிகள் மேற்கொள்ளும் வகையில், விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.