உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் 6 மணி நேர பேச்சுக்கு பின் அமைச்சர்கள் வலியுறுத்தல்

சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் 6 மணி நேர பேச்சுக்கு பின் அமைச்சர்கள் வலியுறுத்தல்

சென்னை: 'அரசின் கோரிக்கையை ஏற்று, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்' என, அமைச்சர்கள் கூறினர்.சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, தலைமை செயலகத்தில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அலுவலகத்தில், நேற்று 6 மணி நேரம் பேச்சு நடந்தது. அதன்பின், அமைச்சர்கள் அன்பரசன், கணேசன், ராஜா ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:முதல்வர் உத்தரவுப்படி, நாங்கள் பேச்சு நடத்தினோம். சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன், சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்கள் என தனித்தனியாக அழைத்து பேசினோம். தொழிலாளர்கள் சில குறைகளை எடுத்து சொன்னார்கள். அதை நிர்வாகத்திடம் எடுத்துக் கூறினோம். அதில், சில கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றனர். நிறைவேற்றிதான் ஆக வேண்டும் என அரசு தரப்பில் எடுத்துரைத்தோம். அதன்படி, 14 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக, சாம்சங் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அதன்படி, 108 குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தொழிலாளர்களின் ஊதியத்தை 5,000 ரூபாய் உயர்த்தி தர ஒப்புக்கொண்டுள்ளனர். தொழிலாளர் இறந்தால், உடனே 1 லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறியுள்ளனர். இதை தொழிலாளர்களின் ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரச்னை தீர்ந்து விடும் என நம்புகிறோம். எனவே, முதல்வரின் கோரிக்கையை ஏற்று, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப வேண்டும். தங்கள் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என, சி.ஐ.டி.யு., வைத்துள்ள கோரிக்கையை ஏற்க முடியாது என சாம்சங் நிர்வாகம் கூறியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தீர்ப்பு வந்தவுடன், அதன்படி அரசு செயல்படும். இவ்வாறு கூறினர்.அதேநேரத்தில் போராட்டம் தொடர்வதாக, சாம்சங் நிறுவனத்தின் சி.ஐ.டி.யு., தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் கூறியுள்ளார்.

ஒப்பந்தத்தில் உள்ளது என்ன?

அமைச்சர்களுடன் நடந்த பேச்சின்போது, சாம்சங் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில் அந்நிறுவனம் கூறியுள்ளதாவது: நிறுவனம், பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து, ஊதியத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவோம் ஒரு இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக, மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும். இது 2024 அக்., முதல் 2025 மார்ச் வரை நடைமுறையில் இருக்கும் தற்போதுள்ள ஐந்து வழித்தடங்களில் உள்ள, 'ஏசி' பஸ்களின் இயக்கம், அடுத்த ஆண்டுக்குள் 108 வழித்தடங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் தொழிலாளர்களுக்கான விடுப்புகள் உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதை ஏற்று, அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்புமாறு, வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி