ஏப்., 17 வரை மிதமான மழை: வானிலை மையம் தகவல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில், ஏப்., 17 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சென்னை கத்திவாக்கத்தில், 6 செ.மீ., எண்ணுாரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், வேலுார் ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை மாதவரம், அம்பத்துார், மணலி புதுநகர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, வேலுார் மாவட்டம் காட்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் ஆகிய இடங்களில் தலா, 2 செ.மீ., மழை பெய்துள்ளது.மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி வலுவிழந்தது. இருப்பினும் அதே மத்திய மேற்கு வங்கக்கடலில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்., 17 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வெயில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, திருச்சியில் அதிகபட்சமாக, 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.3 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, தஞ்சாவூர், திருத்தணி, வேலுார் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.