தமிழகத்தில் வரும் 25 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை:'தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. கடந்த 24 மணி நேரமாக அதே பகுதியில் நிலவுகிறது. இந்த அமைப்பு இன்று வடக்கில் சென்று, ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 25ம் தேதி வரை இதே நிலை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரத்தில், ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அதிகபட்சமாக மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.