மனித உரிமை ஆணையத்தில் போலீஸ் மீது மோகன்ஜி புகார்
சென்னை,:'என்னை கைது செய்த காவல் துறையினர், உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் அலைக்கழித்தனர்' என, சினிமா இயக்குனர் மோகன் ஜி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துஉள்ளார்.பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மோகன் ஜியை, நேற்றுமுன்தினம் திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்து, திருச்சி அழைத்துச் சென்றனர். கைது செய்யும்போது, அதற்குரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, திருச்சி நீதிமன்றம், அவரை ஜாமினில் விடுதலை செய்தது.அதைத் தொடர்ந்து, பா.ம.க., செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாலுவுடன், சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு வந்த மோகன் ஜி, தான் கைது செய்யப்பட்டபோது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் அளித்தார்.இது தொடர்பாக வழக்கறிஞர் பாலு கூறியதாவது:மகளை பள்ளி வாகனத்தில் அனுப்ப வந்த இயக்குனர் மோகன் ஜியை, காலையில், சீருடை இல்லாமல் வந்த போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, அவர் 'டிரவுசர்' தான் அணிந்திருந்தார். ஆடை மாற்றவோ, மனைவியிடம் தகவல் தெரிவிக்கவோ அனுமதிக்கவில்லை.எதற்காக கைது, எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்பதையும் சொல்லவில்லை. வழக்கறிஞரை தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கவில்லை. உணவு, தண்ணீர் கொடுக்காமல், நீண்ட தொலைவு வாகனத்தில் அலைக்கழித்துள்ளனர். இவ்வாறு அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.