உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வ சான்றுகள் தேவை: மத்திய அமைச்சர் ஷெகாவத்

கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வ சான்றுகள் தேவை: மத்திய அமைச்சர் ஷெகாவத்

சென்னை:''கீழடி அகழாய்வுகள் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க, இன்னும் அறிவியல்பூர்வ சான்றுகள் தேவை,'' என, மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின், 11 ஆண்டு கால சாதனை மலரை, சென்னை தி.நகர் கமலாலயத்தில், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் நேற்று வெளியிட, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில், முன்னாள் கவர்னர் தமிழிசை, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் அளித்த பேட்டி:

பிரதமர் மோடியின், 11 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில், 30 கோடி ஏழைகள், வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.மோடி தலைமையில் ஊழல் இல்லாத, வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறது. ஏழை மக்களின் நலன் காக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுதும் மதிக்கத்தக்க நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. வரும், 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற லட்சியத்தோடு, எதிர்கால இந்தியாவுக்கு பலமான அடித்தளத்தை, பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். ராணுவ சாதனங்கள், மொபைல் போன்களை, இந்தியா இறக்குமதி செய்த நிலையில், தற்போது அவற்றை ஏற்றுமதி செய்து வருகிறோம். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்காக, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை இந்தியா கொடுத்தது. பயங்கரவாதிகளின் முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. தமிழகத்தில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல் பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும். இது, மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தமிழ் மிகவும் தொன்மையான மொழி. தமிழின் பெருமையை உலகளவில் பிரதமர் மோடி கொண்டு சேர்க்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

'மலிவான அரசியலுக்கு வரலாறு காத்திருக்காது'

மத்திய அமைச்சர் கூறியதற்கு பதிலளித்து, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ள அறிக்கை: முதலில், அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றனர். அடுத்து ஆய்வு அதிகாரியை இடம் மாற்றினர்.அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றனர். கடைசியாக சமர்ப்பித்த அறிக்கையை, இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டனர். இப்போது வந்து, ஆதாரம் போதவில்லை என்கின்றனர்.அவர்களுக்கு ஒவ்வொரு முறையும், தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது.கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கின்றன. '5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள்' என்றெல்லாம், உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக் கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தர குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற, தணியாத தாகத்தாலா? மறந்து விடாதீர்கள்; வரலாறும் அதுகூறும் உண்மையும், உங்களது மலிவான அரசியலுக்காக காத்திருக்காது. அவை மக்களுக்கானவை; மக்களிடமே சென்று சேரும்.பூனை கண்ணை மூடிக் கொண்டால், உலகம் இருண்டு விடுமா என்ன?இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kulandai kannan
ஜூன் 11, 2025 11:36

கமலிடம் கேட்டால் தகுந்த ஆதாரம் கொடுப்பார்!! மிஷநரிகளும் கொடுப்பார்கள்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 11, 2025 09:40

மத்தியில் இருப்பவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழினம் உலகின் மூத்த இனம்தான். உலகின் முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரி என்கிறார்கள். அப்படி இருக்கையில் இங்கே எவனும் இதை மறுக்க முடியாது. "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி" என்ற மொழியை அறியாதவர்களிடம் பேசி பிரயோஜனமில்லை.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 11:06

ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றி அங்கிருந்து உலகெங்கும் சென்று வாழ்வதாக நவீன மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழ் உருவாவதற்கு முன்னர் உலகில் வேறு மொழி எதுவும் இருந்ததில்லை என்பதற்கு ஆதாரமும் கிடையாது. மொழியை வைத்து அரசியல் செய்து கல்லா கட்டுவதில் தமிழகம் கர்நாடகாவிடையே கடும் போட்டி.


அப்பாவி
ஜூன் 11, 2025 08:30

கண்டு பிடிப்பு அறிக்கைகளை இந்தியில் ஒரு ஆளை வெச்சு எழுதி அனுப்புங்க. உடனே அங்கீகாரம் கிடைச்சிரும். இதுக்குன்னே ஒரு ப்ரொஃபஷனல் ப்ரோக்கர் கும்பல் டில்லியில் இருக்கு. அவிங்க லாபி வெச்சு உள்ளே தள்ளி அங்கீகாரம், நிதி எல்லாம் வாங்கி குடுப்பாங்க. நான் BIRAC என்னும் ஒன்றிய நிறுவனத்திற்கு எனது ஆராய்ச்சியை அனுப்பியிருந்தேன். ஒரு பயலும் கண்டுக்கலே. பதிலும் போடலே.


vivek
ஜூன் 11, 2025 09:17

நீ சமச்சீர் கல்வி படித்து கடிதம் அனுப்பி இருப்பாய்...அதுதான் காரணம் கோவாலு


vivek
ஜூன் 11, 2025 09:21

நீ தான் கிண்டலா ஆராய்ச்சி பண்ணுவியே....அதுதான் பதில் வரலை கோவாலு


சண்முகம்
ஜூன் 11, 2025 05:24

இராமாயணம் 10,000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று அச்சடித்த காகிதத்தை அயோத்தி அருகே தோண்டி எடுக்கப்பட்டால் உடனே அதை வரலாறாக அறிவித்து விடுவார்கள்.


புதிய வீடியோ