உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 40 பேர் பலி: பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் உயிரிழந்த பரிதாபம்

த.வெ.க., தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 40 பேர் பலி: பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் உயிரிழந்த பரிதாபம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்தில் கூட்டத்தில்கடும் நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட, 40 பேர் உயிரிழந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rnyz80cg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் வரும், 2026ல் சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, த.வெ.க., தலைவர் விஜய், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில், இரண்டு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, நேற்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில், மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய், நேற்று மதியம், 12:00 மணிக்கு ரசாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்த விஜய், நாமக்கல் மாவட்டம் ப.வேலுார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் வழியாக வேலுச்சாமிபுரத்திற்கு வர நீண்ட நேரமானது.ஆனால், தொண்டர்கள் நேற்று காலை, 10:00 மணி முதலே, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் குவியத் தொடங்கினர். இதில், குழந்தைகள், பெண்கள் அதிகம் பேர் திரண்டனர். இதனால், மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, இரவு, 7:00 மணிக்கு பிரசார இடத்திற்கு, த.வெ.க., தலைவர் விஜய் வந்தடைந்தார். தொடர்ந்து மக்களிடையே பேச தொடங்கினார்.Galleryஅப்போது, அவர் பேசிய மைக் சரியாக வேலை செய்யவில்லை. மைக்கை சரி செய்வதற்காக, பிரசார வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தினர். அப்போது திரண்டிருந்த மக்கள் நகர இடமின்றி, ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். இதனால், நெரிசல் ஏற்பட்டது. உடனே பேச்சை நிறுத்திய விஜய், மயங்கி விழுந்தவருக்கு தண்ணீர் கொடுக்கும்படி மைக்கிலேயே கூறினார். மேலும், பிரசார வாகனத்தில் இருந்தபடியே, மயங்கி விழுந்தவரின் பகுதியில் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து உதவினர்.அப்போது, ஆம்புலன்சை வரவழைத்த விஜய், மயங்கியவரை மீட்டு அழைத்து செல்லும்படி கூறிவிட்டு மீண்டும் பேச தொடங்கினார். இருந்தபோதும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தொடர்ந்து மயங்கி விழ துவங்கினர்.மேலும், அங்கிருந்த சாலையோர பள்ளத்திலும் சிலர் விழுந்தனர். அதனால், நிலைமைமோசமானதால், 7:15 மணிக்கு விஜய் பேசுவதை முடித்துக் கொண்டு புறப்பட தயாரானார்.அவரை பார்ப்பதற்காக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர்முண்டியடித்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். இதில், குழந்தைகள் மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்தனர்.தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மயங்கி கிடந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைகளை அழைத்து சென்ற பெற்றோர் கதறி அழுததால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அரசு மருத்துவமனையே போர்க்களம் போல காணப்பட்டது. திரும்பிய பக்கம் எல்லாம் கூக்குரல், அழுகை என சோகத்தில் மூழ்கியது. குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

தண்ணீர் பாட்டில் வீசியது சரியா?

கரூர் கூட்டத்தில் விஜய் பேச துவங்கியதும், அவர் பிரசார வாகனத்திற்கு அருகே நின்ற கூட்டத்தினர் மத்தியில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், சிலர் மயக்கமடைந்தனர். உடனே அவருக்கு தண்ணீர் கொடுக்குமாறு கூறி, விஜய் தன் பிரசார வாகனத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை வழங்கினார்.அடுத்தடுத்து தண்ணீர் வேண்டும் என, கூட்டத்தில் இருந்து குரல் எழ, விஜயுடன் நின்ற ஆதவ் அர்ஜூனா மற்றும் விஜயின் பாதுகாவலர்கள் தண்ணீர் பாட்டில்களை ஒவ்வொன்றாக கூட்டத்தினரை நோக்கி வீசினர். மின்தடை செய்யப்பட்டு கும்மிருட்டாக இருந்த நிலையில், இவர்கள் வீசிய தண்ணீர் பாட்டிலை பிடிக்கவும், கீழே விழுந்த பாட்டிலை எடுக்கவும் கூட்டத்தினர் முண்டியடித்ததில், பலர் கீழே விழுந்தனர்.இதில், ஒருவரை ஒருவர் மிதித்ததே இவ்வளவு உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது.

மின்தடையும் ஒரு காரணம்?

கரூர் கூட்டத்திற்கு விஜய் வருவதற்கு முன்னரே, வேலுச்சாமிபுரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததும், மரம், கட்டடம் போன்றவற்றின் மீது இளைஞர்கள் பலர் ஏறியதும், அப்பகுதியில் மின் ஒயர்கள் அருகருகே சென்றதால், அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதாலும், மின்தடை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே நேரத்தில், விஜய் பேச துவங்கிய பிறகு கூட்ட நெரிசல் அதிகரித்து, தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது, அந்த பகுதியே கும்மிருட்டாக இருந்ததால், யார், எங்கு நிற்கின்றனர் என்பது தெரியாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். மேலும், இருட்டாக இருந்ததால், கீழே விழுந்த பலரையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

50 ஆயிரம் பேர் கூடினர்

விஜய் பேசிய வேலுச்சாமிபுரம் பகுதியில், 15 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். ஆனால், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியதால், கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள், குழந்தைகள், உடல்நல பிரச்னை உள்ளவர்களால், நெரிசலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.கூட்டம் அதிகமானதால், ஏராளமானோர் அருகில் உள்ள கட்டடங்கள், மரங்கள் மீது ஏறினர். அதிகமானோர் மரங்களின் மீது ஏறியதால், அதன் கிளைகள் முறிந்து விழுந்தன. கூட்ட நெரிசலில் யார் எங்கிருக்கின்றனர் என்பதை அறிய முடியவில்லை. பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை காணாமல் கதறி அழுததையும் காண முடிந்தது. அரசியல் கூட்டத்தில் நடந்த, மிகப்பெரிய அசம்பாவிதம், தமிழகம் முழுதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வந்தடைந்த விஜய்

கரூர் பிரசார கூட்டத்தில், கடும் நெரிசலில் மக்கள் சிக்கியதால், த.வெ.க., தலைவர் விஜய் தன் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டார். காரில் திருச்சி விமான நிலையம் வந்த அவரை, பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். ஆனால், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து, பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்றிரவே அவர் சென்னைவந்தடைந்தார்.

'இதயம் நொறுங்கியது'

கரூர் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருச்சி வந்த விஜய் தனி விமானம் மூலம் நேற்றிரவு 11:15 மணியளவில் சென்னை வந்தார்.தன் டுவிட்டர் பதிவில், 'இதயம் நொறுங்கிப்போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தை களால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.'கரூரில் உயிரிழந்த சகோதர - சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய பிரார்த்திக் கின்றேன்' என்றார்.

உயிரிழந்தது வேதனை

கரூரில், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.-திரவுபதி முர்முஜனாதிபதி

மனம்வருந்துகிறேன்

கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்குகிறது. உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நினைத்து மனம் வருந்துகிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள அவர்களுக்கு மனவலிமை கிடைக்கவும், காயம் அடைந்தோர் விரைவில்குணமடையவும்பிரார்த்திக்கிறேன்.- -- மோடி, பிரதமர்

கவலை அளிக்கிறது

கரூரில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்றுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பொதுமக்களுக்கு தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் ஆகியோரை தொடர்பு கொண்டு அறிவுறுத்தி உள்ளேன். அருகில் உள்ள திருச்சி மாவட்ட அமைச்சர் அன்பில் மகேஷிடம், போர்க்கால அடிப்படையில், தேவையான உதவியை செய்து தரும்படிஉத்தரவிட்டுள்ளேன்.அங்கு விரைவில் நிலைமையை சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, கூடுதல் டி.ஜி.பி.,யிடம் பேசி இருக்கிறேன். டாக்டர்களுக்கும், காவல் துறைக்கும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.-- ஸ்டாலின்,முதல்வர்

தொண்டர்கள் மீது தடியடி

கரூர், வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் விழுந்தனர். மிதிபட்டவர்களும், இறந்தவர்களும், காயமடைந்தவர்களும், மயக்கமடைந்தவர்களும் சாலையில் கிடந்தனர். இவர்களை மீட்பதற்காக ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் பிரசாரம் நடந்த இடமே போர்க்களம் போல் மாறியது.இந்நிலையில், த.வெ.க., தொண்டர்கள் கூட்டம் நடந்த இடத்திலேயே சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறித்தியும் செல்லாததால், லேசான தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

பறிபோன உயிர்கள்

கரூரில் நடந்த அரசியல் பேரணி கூட்டத்தில், குழந்தைகள் உட்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது, மிகுந்த வலியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த துயரமான சம்பவத்தில், உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, என் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். - தமிழக கவர்னர் ரவி

மருத்துவ குழு விரைவு

மருத்துவ குழு விரைவு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி: கரூரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்து, மருத்துவ குழுவினர் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சி, மதுரை, கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் தேவையான அளவுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், இறந்தவர்கள் அனைவரின் உடல்களும், பிரேத பரிசோதனை செய்வது சட்டத்திற்கு உட்பட்டது. அதற்காகவும், மருத்துவ குழுவினர் கரூர் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை நடத்தனும்

சென்னை:'போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால், கரூரில் விபத்து நடந்ததா என்பது குறித்து முழு விசாரணை நடத்தி, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட 30க்கும் அதிகமானோர் இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பலர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவர் என்பதை முறையாக கணக்கிட்டு, அதற்கு ஏற்ப இடத்தை தேர்ந்தெடுத்து கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் மக்கள் பாதுகாப்புக்கு தேவையான அளவு போலீசாரை பணியமர்த்துவதும், காவல் துறையின் பொறுப்பு.விஜய் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யபட்டதாகவும் தகவல் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாக தமிழக அரசும், காவல் துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தி.மு.க.,வினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த போலீசாரையும் அனுப்பி, பாதுகாப்பு கொடுக்கும் அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இருப்பது வழக்கமாகி இருக்கிறது.உடனே, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால், இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைபட்டது குறித்தும், முழு விசாரணை நடத்தி, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உரிய இழப்பீடு வேண்டும் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக பா.ஜ., மூத்த தலைவர்கள், மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, உரிய உதவிகள் செய்ய கேட்டுக் கொண்டுள்ளேன். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருத்தம் அளிக்கிறது

தமிழகத்தின் கரூரில் நடந்த ஓர் அரசியல் பேரணியில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இது, பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்றும் படி கேட்டுக்கொள்கிறேன்.ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,

ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை:முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:கரூரில் நடந்த, த.வெ.க., அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த, அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளேன்.திருச்சி, சேலம், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ குழுக்களுடன், கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் உடனடியாக அமைக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் கேட்டறிந்ததுடன், மத்திய அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல், விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் பற்றி அறிக்கை அளிக்கும்படியும் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கலெக்டர்கள் விரைவு

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, திருச்சி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக கரூர் சென்றனர். சேலத்தில் இருந்த அமைச்சர் சுப்பிரமணியனும், அங்கு விரைந்து சென்றார். நெரிசலில் சிக்கியவர்களுக்கு, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிகாரிகள் தேவையான உதவிகளை அளித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் கட்டணமின்றி, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம், 40 பேர் இறந்துள்ளனர். இறப்பு அதிகரிக்காமல் இருக்க தேவையான சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.- செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

கனோஜ் ஆங்ரே
செப் 29, 2025 11:40

எம்ஆர். இராதா சொல்ற மாதிரி... கூத்தாடிங்க பின்னாடி போனா... 40 என்ன...? 400 சாவுகூட விழும்...?


கனோஜ் ஆங்ரே
செப் 29, 2025 11:32

இங்கே அதிகபட்சமானோர், அரசையும் விஜய்யையும், அரசியல் கட்சியினரையும் குற்றம் சாட்டுகின்றர்.. மொதல்ல... நாம ஒழுக்கமா இருக்குறோமா...?ங்கற பத்தி யோசிக்காம, மற்றவர்களை குற்றம் சாட்டுவது பேடித்தனம். விஜய் என்பவன் ஒரு நடிகன்...


hariharan
செப் 28, 2025 22:40

ஒரு கட்சி வளர்கிறது என்பதற்கு தற்போதைய குறியீடுகள் கட்சி பொதுக்கூட்டத்தில் எத்தனை பேர் இறந்தனர், தலைவருக்காக எத்தனை பேருந்துகளை தீ வைத்தனர், எத்தனைபேர் தீக்குளித்தனர், எத்தனை மரங்களை வெட்டி சாலைகளில் உள்ள போக்குவரத்தை எத்தனை மணி நேரம் ஸ்தம்பிக்க வைத்தனர் என்று கட்சிகளின் வளர்ச்சிக் குறியீடு மாறிவிட்டது. அதில் விஜயும் சளைத்தவர் இல்லை. கேடுகெட்ட தமிழக அரசியலில் இவரும் நாளைக்கு முதலமைச்சராக வருவதற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு திரிகிறார். இவருக்கு எல்லோரையும் குறை சொல்வது மட்டுமே வேலை. பாட்டிலுக்கு 10 ரூபா என்று விஜய் பாடியவுடன் காவல்துறையினர் என் தடியடி நடத்தினர்? எதற்காக மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது? பிரச்சார கூட்டங்களை இத்தனை மணிக்கு என்று அறிவித்துவிட்டு காலம் தாழ்த்தி கூட்டம் தொடங்கும் என்றால் பொதுமக்களுக்கு வேண்டிய குடிநீர், சாப்பாடு, மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற வசதிகளை செய்ய இந்த கையாலாகாத கட்சிகளுக்கு முடியாதா?


சத்யபால்
செப் 28, 2025 18:57

அடுத்த வருடம் பொது தேர்வு மற்றும் பல தேர்வுகள் நடக்க உள்ளன . இன்றைய நவீன கால உலகத்தில் நேரில் சென்று தான் ஒட்டு சேகரிக்க வேண்டிய கட்டாயமில்லை. அச்சு ஊடகங்களும் இன்னும் பல வலைதளங்களும் உள்ளன அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும்


ஆனந்த்
செப் 28, 2025 17:29

மக்களின் உயிர்கள் தான் அரசியல் கட்சிகளின் முதலீடு.


Ganesh
செப் 28, 2025 17:20

Reel is not Real. Youngsters please understand.


Sridhar
செப் 28, 2025 16:40

எப்போது ரூபாய்க்கு 3 படி - போடவில்லையென்றால் எனக்கு சவுக்கடி கொடுங்கள்ன்னு சொல்லி ஒருவன் ஆட்சிக்கு வந்தானோ, எப்போ மக்கள் அந்த மாதிரியான ஆட்களுக்கு ஆதரவளிக்க பழகினார்களோ, அப்போவே தமிழ்நாட்டின் தரம் கெட்டுவிட்டது. இப்போ நடபப்து அதன் நீட்சி 2.0. இன்னும் வரும் காலங்களில் என்னென்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ


Sridhar
செப் 28, 2025 16:13

முதன்மை மாநிலத்தின் காவல் துறை பிரச்சார கூட்டங்களுக்கு காற்று வசதி உள்ள பொது மக்கள் பேக்கு வரத்துக்கு தடங்கள் இல்லாத நிரல்களில் அனுமதிக்க வேண்டும். அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் பல அங்கு நிறுத்த வேண்டும். பிரசாரம் செய்பவர் மக்களுக்கு தேவையான தண்ணீர் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் பிரசாரம் ஆரம்பித்து முடிக்க வேண்டும். தாமதம் ஆனால் அனுமதி ரத்து என்கிற கட்டுப்பாடு தேவை. தட்ப வெப்பத்தின் பாதிப்புகளை கருதி பிரச்சார நேரம் முறை படுத்த வேண்டும். கட்சி பாகுபாடு இன்றி இவை விதிக்கப்பட வேண்டும். அரசின் சொத்துக்களை பயன்பாட்டிற்கு கட்டணம் பெற வேண்டும். நேர்மையான ஜனநாயகத்திற்கு உதவ வேண்டும்.


மோகன்
செப் 28, 2025 13:52

போலி சமுக நீதி காவலர்கள் எங்கே ?


Mariadoss E
செப் 28, 2025 13:50

நிவாரணம் குவியும், கருத்து கந்தசாமிகள் ஓடி வந்து ஒப்பீனியன் குடுப்பாங்க ஆனால் போன உயிர் போனது தான். சினிமா பைத்தியமா அலையாமல் உருப்படியா ஏதாவது செஞ்சா நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது. அவன் அவன் உயிருக்கு அவன் அவன் தான் பாதுகாப்பு....