உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.டி.சி.பி.,யில் அனுமதி வழங்காமல் பாதிக்கு மேல் விண்ணப்பம் தேக்கம்

டி.டி.சி.பி.,யில் அனுமதி வழங்காமல் பாதிக்கு மேல் விண்ணப்பம் தேக்கம்

சென்னை:ஒற்றைச்சாளர முறை துவங்கியது முதல், கடந்த 23 மாதங்களில் 3,301 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 1,191க்கு கட்டட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பொறுப்பை, டி.டி.சி.பி., ஏற்றுள்ளது. கட்டுமான திட்ட அனுமதி, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டது.

ஒப்புதல்

இதற்காக, 2022ல் ஒற்றைச்சாளர முறை துவங்கியதில் இருந்து, ஒவ்வொரு மாதமும் கட்டட அனுமதி விபரங்கள், கோப்புகளின் நிலவரம் குறித்து, டி.டி.சி.பி., இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் வரையிலான 23 மாதங்களில், மாவட்ட அலுவலகங்களில், அதிக உயரமில்லாத கட்டடங்கள் தொடர்பாக, 3,301 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 1,191 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.எஞ்சிய, 2,110 விண்ணப்பங்கள், கூடுதல் விபரங்கள் கேட்பு உள்ளிட்ட காரணங்களால் நிலுவையில் உள்ளன. இதில், விண்ணப்பங்களை பைசல் செய்ய, சராசரியாக 52 முதல் 62 நாட்களாகின்றன. அதே நேரத்தில், டி.டி.சி.பி., தலைமை அலுவலகத்தில், அதிக உயரமில்லாத கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்கள் ஆகிய இரு பிரிவிலும் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் குறைந்த கால அவகாசத்தில், பைசல் செய்யப்பட்டுள்ளன என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி ஆய்வு

இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:ஒற்றைச்சாளர முறையில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகள் எளிதாகி உள்ளன. ஆனால், விண்ணப்பங்களை பைசல் செய்வதில், மாவட்ட அலுவலகங்களில் தாமதம் ஏற்படுகிறது.குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒருமுறையாவது, மாவட்ட அலுவலகங்களில் நிலுவை கோப்புகள் குறித்து தலைமையக அதிகாரிகள் ஆய்வு செய்தால் பணிகள் விரைவுபடுத்தப்படும். ஒற்றைச்சாளர முறையில், 45 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உள்ளது. ஆனால், 65 நாட்களாவது ஆரோக்கியமானதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

'இலக்கை விரைவில் எட்டுவோம்'

இதுகுறித்து, டி.டி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒற்றைச்சாளர முறையில் ஒரு விண்ணப்பம் பெற்றால், 45 நாட்களுக்குள் கட்டட அனுமதி அளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது, இதில், 55 நாட்கள் வரை ஆகின்றன. கூடுதல் விபரங்கள், கூடுதல் ஆவணங்கள் பெறுவது, தடையின்மை சான்று பெறுவது போன்ற காரணங்களால் தான் இந்த தாமதம் ஏற்படுகிறது. இதை இன்னும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, 45 நாட்களில் திட்ட அனுமதி என்ற இலக்கை விரைவில் அடைந்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ