எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
சென்னை; சென்னையில் நேற்று அதிகாரிகள் நடத்திய பேச்சில், பெரம்பலுாரில் உள்ள எம்.ஆர்.எப்., ஆலையின் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. பெரம்பலுார் மாவட்டத்தில், எம்.ஆர்.எப்., டயர் நிறுவனத்தின் வாகனங்களுக்கான, டயர்கள் உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், பல கட்டங்களாக நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தொழிலாளர்களுடன் நேற்று, தொழிலாளர் நலத்துறை உயரதிகாரிகள் பேச்சு நடத்தினர். நிர்வாக தரப்பில் இருந்து, எம்.ஆர்.எப்., துணைத் தலைவர் தீபக் மேத்யூ, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த பேச்சில், இடைக்கால தீர்வாக ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் முன்வந்தது. அதை ஏற்று, தொழிற்சங்கத்தினரும் வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கையில் ஈடுபடாமல், நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தனர். இதையடுத்து, இன்று முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப ஒப்புக்கொண்டனர். இத்தகவலை தொழிலாளர் நலத்துறை செயலர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.