உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போடிமெட்டு மலைப் பாதையில் மண் சரிவு; மூணாறு ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை

போடிமெட்டு மலைப் பாதையில் மண் சரிவு; மூணாறு ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை

போடி : தேனி மாவட்டம், போடிமெட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்ததால் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர்.தமிழக கேரளாவை இணைக்கும் தேனி -- மூணாறு வழித்தடத்தில் அமைந்து உள்ளது போடிமெட்டு. தேனியில் இருந்து 22 கி.மீ., சமவெளியில் சென்றால் போடி முந்தல் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பகுதியை கடந்து 22 கி.மீ., மலைப்பகுதியில் சென்றால் கடல் மட்டத்தில் இருந்து 4644 அடி உயரத்தில் தமிழக எல்லையான போடிமெட்டு உள்ளது. 18 அடியாக இருந்த போடிமெட்டு ரோடு தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.17 கோடி செலவில் 24 அடியாக அகலப்படுத்தப்பட்டது.ரோடு அகலப்படுத்த பாறைகளுக்கு வெடி வைத்ததாலும், மழை காரணமாக அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு, போடி -- மூணாறு போக்குவரத்து அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.நேற்று முன்தினம் போடிமெட்டு, கேரளா பகுதியில் இரவு 9:00 மணி அளவில் கன மழை இடி, மின்னலுடன் விடிய, விடிய பெய்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாலை 1:00 மணி முதல் 2:30 மணி வரை போடிமெட்டு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். அதன் பின் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.இந்நிலையில் 9வது வளைவில் மண் சரிவு ஏற்பட்டதில் அங்கிருந்த சிறிய அளவிலான பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. இதனால் மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளும், தொழிலாளர்களை தோட்ட வேலைக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்றனர்.தேசிய நெடுஞ்சாலைத்துறை மண் அள்ளும் இயந்திரம் மூலம் ரோட்டில் விழுந்த மண், பாறைகளை அகற்றினர். போடிமெட்டில் புலியூத்தி நீர் அருவி உட்பட பல இடங்களில் நீர் அருவியாய் கொட்டி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை