சென்னை: நிலத்தரகர் கொலை வழக்கில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.சென்னை கொளத்துார் காந்தி நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன். மாற்றுத்திறனாளியான இவர் நில தரகர். நில பிரச்னையால், 2012 ஜன., 10ல் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். கொளத்துார் போலீசார் வழக்கு பதிந்து, சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.குற்றப்பத்திரிகையில், கொலையை துாண்டிய தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் பெயர் சேர்க்கப்படவில்லை என, புவனேஸ்வரன் தந்தை சிவா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முரண்பாடுகள் உள்ளதாக கூறி, குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில், சி.பி.ஐ., விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, 2014ல் உத்தரவிட்டது.இந்த உத்தரவுபடி, விசாரணையை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள எம்.பி.,- - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்தது. இந்த வழக்கில், அரசுத்தரப்பில் சாட்சியங்கள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ரங்கநாதன், தற்போது தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவராக உள்ளார்.