சோலார் கூரைக்கு கீழ் பயிர் சாகுபடி உதவுவதற்கு நபார்டு தயார்
கோவை:'விவசாய நிலத்தில் ஒரே சமயத்தில் சோலார் மின் உற்பத்தி மற்றும் பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலையுடன் இணைந்து செயல்பட தயார்' என, 'நபார்டு' எனப்படும், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி தெரிவித்துள்ளது. கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 'விவசாயத்தில் நீடித்த சோலார் மின் உற்பத்தி' இரண்டாவது சர்வதேச கருத்தரங்கு, நேற்று துவங்கியது. வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த 29 பல்கலைகளில் இருந்து, 100க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். துவக்க விழாவில், வேளாண் பொறியியல் துறை டீன் ரவிராஜ் பேசுகையில், “விவசாய நிலத்தில் சோலார் கூரைகளுக்கு கீழ், பயிர் சாகுபடி செய்வதன் வாயிலாக, விவசாயிகள், தொழில்துறையினர் என இருதரப்பினரும் பயன்பெறலாம்,” என்றார். பல்கலை பொறுப்பு துணைவேந்தர் தமிழ்வேந்தன் தலைமை வகித்து பேசுகையில், “வேளாண் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும், முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதே, சோலார் கூரைகளுக்கு கீழ் பயிர் சாகுபடி தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம்,” என்றார். நபார்டு வங்கியின், தமிழ்நாடு தலைமை பொதுமேலாளர் ஆனந்த் பே சியதாவது: சோலார் கூரைகளின் கீழ், குறைந்த நிழல் இருக்கும். 'மைக்ரோ கிளைமேட்' எனப்படும் நுண் பருவநிலை நிலவும். வெப்பம் சற்று குறைவாக இருக்கும். இதுபோன்ற சூழலில் வளரும் பயிர்களைச் சாகுபடி செய்வதன் வாயிலாக, விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். 100 ஏக்கர் பரப்பில், பரீட்சார்த்த முறையில் இத்திட்டத்தை செயல்படுத்த, வேளாண் பல்கலையுடன் இணைந்து செயல்பட நபார்டு தயார். இவ்வாறு அவர் பேசினார்.