உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிந்தனைக்களம்: தமிழ் மண்ணில் இருந்தே தேசிய ஒற்றுமை !

சிந்தனைக்களம்: தமிழ் மண்ணில் இருந்தே தேசிய ஒற்றுமை !

இன்று அக்டோபர் 31, தேச ஒற்றுமை தினம். 'ஏக் தா திவாஸ்' என்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் 'தேச ஒற்றுமை தினம்' கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த 546 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இந்திய குடியரசாக ஒருங்கிணைக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் சர்தார் வல்லபபாய் படேல். அவருக்கு குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள சிலை, இந்திய தேசிய ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றும் சின்னமாக விளங்குகிறது. இந்த தேசம் புறநானுாற்று காலத்திற்கு முன்பிருந்தே பண்பாடு மற்றும் கலாசார ரீதியாக, ஒரே தேசமாக விளங்கியதின் அடையாளமாக 'தென் குமரி, வட பெருங்கல், குணக் குட கடலா எல்லை, குன்று மலை காடு நாடு ஒன்றுபட்டு வழிமொழிய, கொடிது கடிந்து கோல் திருத்த படுவது உண்டு, பகல் ஆற்றி, இனிது உருண்ட சுடர் நேமி முழுது ஆண்டோர் வழி காவல!' இந்த தேசம் முழுமையாக ஒரு செங்கோலால், ஒரு அறத்தால் ஆளப்பட்டிருக்கிறது என்பதை, இந்த பாடல் விளக்குவது மட்டும் அல்லாமல், இன்றிருக்கிற அதே இமயமலை, தென் குமரி, கிழக்கு மேற்கு பகுதிகளில் கடலால் சூழப்பட்ட எல்லையை, இந்த பாடல் வர்ணிக்கிறது. இதை சில குழப்பவாதிகள் வேண்டுமென்றே வட பெருங்கல் என்பதை வட வேங்கடம் என்று புரிந்து கொள்கின்றனர். அது வேங்கட மலையல்ல; இமயமலை என்பதற்கு இன்னொரு புறநானுாற்று பாடல் உள்ளது. அதில், 'வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்' என்று சொல்லுகிறது. இதிலிருந்தே வடக்கில் இருக்கிற மலை என்று குறிப்பிடப்படுவது, பனிபடர்ந்த இமயமலை தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, இந்த மண்ணில், திராவிடம் என்ற கார்டுவெல் எனும் வெள்ளைக்காரன் உருவாக்கிய தத்துவமும், தமிழ் தேசியம் என்ற தத்துவமும் பேசப்பட துவங்குவதற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழனுடைய தனிப்பட்ட அடையாளமாக தேசியம் இருந்துள்ளது. நம் தமிழ் சான்றோர்கள் பலரும் வ.உ.சி., காமராஜர், பாரதி, சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் போன்ற பலருடைய அடையாள தத்துவமாக தேசியமே இருந்துள்ளது. இவ்வளவு ஏன்... இந்த தேசத்திற்கான முதல் சுதந்திர பிரகடனம், 1801ம் ஆண்டு மருது சகோதரர்களால் பிரகடனப் படுத்தப்பட்ட ஜம்புத்தீவு பிரகடனம். அதில் ஜம்புத்தீவு என்று குறிப்பிடப்படுவது, இந்திய தேசமாகும். ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்குமான சுதந்திர பிரகடனத்தை, நம் தமிழர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பாகவே, முதல் தேசிய சுதந்திர போராட்ட பிரகடனமாக அறிவித்தனர். அதுவே, தமிழ் மக்களுக்கான பெருமையாக இருக்கிறது. நாடு முழுவதும் சுதேசி என்ற தத்துவம் - உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவது, வெளிநாட்டு பொருட்களை நிராகரிப்பது. இப்படி சுதேசி தத்துவம் பேசப்பட்டுக் கொண்டிருந்த போதே, அதில் உட்சபட்ச நடவடிக்கையாக வெள்ளைக்காரர்களுக்கு எதிராக சொந்தமாக கப்பல் கம்பெனியை தொடங்கி, அதை சாத்தியப்படுத்திய வ.உ.சி., ஒட்டுமொத்த பாரத தேசத்திற்கான சுதந்திர மற்றும் சுதேசி போராட்டத்திற்கான விடிவெள்ளியாக திகழ்ந்தது, தமிழர்களுடைய மரபாக இருக்கிறது. 'தேசியமும், தெய்வீகமும் என் இரு கண்கள்' என பறைசாற்றி, நேதாஜியின் கரங்களுக்கு வலுசேர்த்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், தமிழர்களின் தனிப்பட்ட அடையாளமாக இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஆகையால், இந்த தேச ஒற்றுமை தினம் என்பது, இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்பட்டாலும், தமிழக மண் என்பது தேசிய ஒற்றுமைக்கான தனித்துவமான வரலாற்று அடையாளமாக என்றைக்கும் திகழ்ந்து வருகிறது. தமிழ் மண்ணின் சான்றோர்கள் தேசியத்தையும் இந்த தேசத்தின் அறத்தையுமே பேசி வந்துள்ளனர். தமிழ் மற்றும் தமிழர்களின் தனித்துவமான வரலாற்றுப் பெருமையாக இருக்கக்கூடிய திருக்குறள், இந்த தேசத்தினுடைய அறத்தை விளக்குகிற ஒரு அற்புதமான நூலாக இருந்து வருகிறது. 'ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது சீரியது என்றொன்றைச் செப்பரிதால் -- ஆரியம் வேதம் உடைத்து தமிழ்த்திரு வள்ளுவனார் ஓது குறட்பா உடைத்து' என்கிறது வண்ணக்கஞ் சாத்தனார் பாடல். அதேபோல உக்கிரப்பெருவழுதி பாண்டியனார், 'நான்மறையின் மெய்ப்பொருளை முகப்பொருளா நான்முகத்தோன்றான் மறைந்த வள்ளுவனாய்த் தந்துரைத்த நுான்முறையை' என்று திருக்குறளை, 'அந்த பிரம்ம தேவனே வந்து, நான்கு வேதங்களில் மெய்ப்பொருளை மூன்று பால்களாக வடித்துக் கொடுத்துள்ளார்' என்று பாடியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியாளர்கள், நாடு முழுவதும் ஹிந்தி மொழியை நிரவல் செய்ய முயற்சித்தபோது, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திராவிட சிந்தனையாளர்கள், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவான மனப்பான்மையை, இந்திய தேசியம் என்ற உன்னத தத்துவத்திற்கு எதிரான மனப்பான்மையாக மடைமாற்ற முயற்சித்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர். ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சித்த காங்கிரசின் தவறே, இதற்கு காரணமாக அமைந்தது. ஆனால், இன்றைக்கு திராவிடம் என்ற தத்துவம் பேசும்கட்சியினரும், காங்கிரசும் கொஞ்சி கூடி குலாவுகின்றனர். காங்கிரஸ் என்ற கட்சியினரும் தேசியத்திலிருந்து வெகுதுாரம் விலகி, அந்நிய நாட்டு சக்திகள் பேசும் தேச விரோத குரலாக மாறிப் போய்விட்டது. அதன் பின், தமிழ் தேசியம் என்ற தத்துவம், இந்த மண்ணில், திராவிடம் என்ற தத்துவம் தமிழர்களை ஏமாற்றுகிறது என்பதை, தமிழ் மக்களுக்கு உணர்த்துவதற்காக பேசப்பட்டதே தவிர, அது தேசியம் என்ற தத்துவத்திற்கு எதிரானது அல்ல. இப்படித்தான் அதையும் மடைமாற்ற சிலர் முயற்சித்து வருகின்றனர். தமிழும், தேசியமும் தான் இந்த மண்ணின் வரலாற்று காலத்திலிருந்து, தமிழ் சான்றோர்களால் பேசப்பட்டு வந்த உன்னதமான தத்துவமாக விளங்கி வருகிறது. இன்றைக்கும், என்றைக்கும் தமிழ் மண்ணிற்கான தேவை 'தமிழும், தேசியமும்' தானே தவிர, தமிழ் தேசியம் அல்ல. எனவே, இந்த தேசிய ஒருமைப்பாட்டு தினம், தேசிய ஒற்றுமை என்ற உன்னத தத்துவத்திற்கான முன்னோடியாக விளங்கிய தமிழக மண்ணிலிருந்து தொடர்ந்து கொண்டாடப் படுவது பெருமையளிக்கிறது. கடந்த 2014ல் இருந்து, சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளில் ஆண்டுதோறும், தமிழகத்திலும் கொண்டாடப்பட்டு வந்தாலும், இன்றிலிருந்து அது வெகுஜன விழாவாகவும் கொண்டாடப்படுவது சிறப்பிலும் சிறப்பு! - வழக்கறிஞர் அஸ்வத்தாமன் மாநில செயலர், தமிழக பா.ஜ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ