சொத்து குவிப்பு வழக்கு நவாஸ்கனி பதில் தர உத்தரவு
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., நவாஸ்கனி பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரத்தில், 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாஸ்கனி. இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, சி.பி.ஐ.,யில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2019 லோக்சபா தேர்தல் வேட்பு மனுவில், மனைவி, மகனுக்கு, 19.71 கோடி ரூபாய் சொத்துகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்தாண்டு தேர்தல் வேட்பு மனுவில், 40.62 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என கூறப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக, 23.58 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளார். எனவே, விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ., வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி, ''புகார் குறித்து விசாரணை நடத்தியதில், 2.85 சதவீதம் அளவுக்கு மட்டுமே அதிகமாக நவாஸ்கனிக்கு சொத்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது,'' என பதில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி, நவாஸ்கனி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவ., 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.