நக்சலைட் தடுப்பு பிரிவு சிறுமலையில் முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் குற்ற செயல்கள் நடக்கிறதா என்பதை கண்காணிக்க நக்சலைட் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். அங்குள்ள பொது மக்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறுமலை, கொடைக்கானலில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு தீவிரவாதிகள் முகாமிட்டு நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என கருதிய நக்சலைட் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடிக்கடி முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சில நாட்களுக்கு முன் சிறுமலை பகுதியில் கேரளாவை சேர்ந்த சாபு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை மீட்க சென்ற 2 போலீஸ் உட்பட 3 பேர் அங்கிருந்த வெடிப்பொருட்கள் எடுத்த போது வெடி விபத்து ஏற்பட்டு காயமடைந்தனர். இதனால் என்.ஐ.ஏ., கியூ பிரிவு போலீசார் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் சிறுமலை முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது வரை இறந்தவர் இறந்தது குறித்து மர்மமாகவே உள்ளது. சிறுமலையில் காட்டேஜ்கள் இருப்பதால் யார் வேண்டுமானாலும் தங்கியிருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் மார்ச் 21 முதல் நக்சலைட் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சிறுமலையில் முகாமிட்டுள்ளனர். தனியார் தோட்டங்களில் தங்கியுள்ளோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.