உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய கல்விக்கொள்கை தேசிய நலனுக்கானது துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜக்தீப் தன்கர் பேச்சு

புதிய கல்விக்கொள்கை தேசிய நலனுக்கானது துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜக்தீப் தன்கர் பேச்சு

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில், துணை வேந்தர்கள் மாநாட்டை துவக்கி வைத்த, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:இன்று நம் நாடு மட்டுமல்ல, முழு உலகமும் கடுமையான சவால்களையும், விரைவான தொழில்நுட்ப சீர்குலைவையும் எதிர்கொள்கின்றன. நாம் கண்ட தொழில்துறை புரட்சிகளைவிட இது மிகவும் கடுமையானது.தமிழகத்தில் சிறந்த கல்வி நிறுவனங்கள் இருந்தன. காஞ்சிபுரம் கல்வியில் சிறந்து விளங்கியது. சென்னை பல்கலை, 1857லிருந்து சிறந்து விளங்கி வருகிறது. நம் கல்வியை மேம்படுத்த வேண்டும். குருகுலம் என்ற சிறந்த கல்வி அமைப்பை நாம் கொண்டிருந்தோம். அதன் வாயிலாக சமூகத்துக்கு சேவையாற்றி வந்தோம். நாட்டில், 11 செம்மொழிகள் உள்ளன. இவை நம் கலாசாரம், பண்பாடு, கல்வியை பறைசாற்றுகின்றன.கல்வி முக்கியமானது என்பதால், கல்வியில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் இது. நாம் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மேற்கத்திய மற்றும் காலனி ஆதிக்க மனப்பான்மையை விட்டு, நம் பாரம்பரிய கல்வியை இளைய சமுதாயத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தேசிய கல்விக்கொள்கை தேசிய நலனுக்கானது. இதன் வாயிலாக தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் மற்றும் உயர்கல்வியை கற்கலாம். இவ்வாறு துணை ஜனாதிபதி பேசினார்.

நடனமாடி உற்சாகம்

ஊட்டி அருகே முத்தநாடு மந்துக்கு நேற்று மாலை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், அவரது மனைவி டாக்டர் சுதீஷ் தன்கர், கவர்னர் ரவி ஆகியோர் சென்றனர். தோடர் பழங்குடியினர் மக்கள் வரவேற்றனர். தோடர் பழங்குடியினருடன் துணை ஜனாதிபதி பாரம்பரிய நடனமாடினர். பின், குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !