உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உட்கட்டமைப்பு திட்டங்களை கண்காணிக்க புதிய பிரிவு

உட்கட்டமைப்பு திட்டங்களை கண்காணிக்க புதிய பிரிவு

சென்னை:திட்டங்கள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மைக்கு புதிய பிரிவை ஏற்படுத்தும் பணிகளை, உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் துவக்கி உள்ளது. புதிய சாலைகள், மேம்பாலங்கள், குடியிருப்புகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள், பல்வேறு துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிவதில்லை. தற்போது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள தியாகராஜன், நிதி அமைச்சராக இருந்த போது, 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கட்டமைப்பு திட்டங்களை, 'ஆன்லைன்' முறையில் கண்காணிக்க நடவடிக்கை எடுத்தார். ஒவ்வொரு திட்டத்திலும் ஏற்படும் முன்னேற்றங்கள், அதில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் பின்னணி உள்ளிட்ட விபரங்கள் நேரடியாக கண்காணிக்கப்படும் நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இந்த நடைமுறை காணாமல் போய்விட்டது. இந்நிலையில், தமிழக உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:உயர் மதிப்புள்ள உட்கட்டமைப்பு திட்டங்கள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மைக்காக தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளது. இப்பிரிவு, கட்டமைப்பு திட்டங்கள், எவ்வித தொய்வும் இன்றி, குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும். இதற்கான வழிமுறைகளை வகுக்க, கலந்தாலோசகர் தேர்வு பணிகள் துவங்கியுள்ளன. அடுத்த சில மாதங்களில் புதிய பிரிவு செயல்படத் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி