செய்திகள் சில வரிகளில்
சென்னை, கிண்டி, காந்தி மண்டபம் சாலையில் உள்ள, அறிவியல் தொழில்நுட்ப மையம், 5, 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, கணித திறன் போட்டி தேர்வை, ஜன., 5ம் தேதி காலை 11:00 மணிக்கு நடத்த உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள், 100 ரூபாய்க்கான வரைவோலையுடன், வரும் 20ம் தேதிக்குள், 'செயல் இயக்குனர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை - 25' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, முறையே, 5,000, 2,000, 1,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். ஆறுதல் பரிசாக, 20 பேருக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும்.ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய, வெல்டர், பிட்டர் உட்பட பல்வேறு பணிகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மூன்றாண்டு பணி அனுபவத்துடன், 44 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், www.omcmanpower.tn.gov.inஇணையதளத்தில், பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ovemclnm .com 'இ - மெயில்' முகவரிக்கு, தங்களின் சுய விபர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகலை, வரும் 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.தமிழகத்தில், மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு, சிறப்பாக சேவை செய்து வரும் நபருக்கு, குடியரசு தின விழாவில், 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' முதல்வரால் வழங்கப்படும். விருதாளருக்கு, 2001 முதல், 9,000 ரூபாய் மதிப்புள்ள, வெள்ளியில் உருவாக்கப்பட்டு, தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கம், 25,000 ரூபாய் பரிசுத் தொகை மற்றும் நற்சான்றிதழ், இதுவரை வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல், பரிசுத் தொகை 25,000 ரூபாயை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.